சென்னை, அண்ணா பிறந்தநாளையொட்டி பருத்தி ரகங்களுக்கு மொத்தம் 30 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என கூட்டுறவு சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க கைத்தறித் தொழிலைப் பாதுகாத்து, நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, தொடக்கக் கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களை வலுப்படுத்தி, அவற்றைத் தன்னிறைவுபெற்ற அமைப்புகளாக உருவாக்கும் நோக்கில், தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. கைத்தறித் துணிகளின் விற்பனையை ஊக்குவித்து, நெசவாளர்களின் உற்பத்திக்கு நிலையான சந்தை வாய்ப்பை ஏற்படுத்துவதுடன், வெளிச்சந்தை போட்டியைச் சமாளிக்கும் வகையில் ரூ. 210 கோடி திட்டச் செலவில் தள்ளுபடி மானியத் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், கைத்தறித் துணி விற்பனைக்கு ஆண்டு முழுவதும் 20 விழுக்காடு தள்ளுபடி மானியம், நிர்ணயிக்கப்பட்ட உச்ச வரம்பிற்குட்பட்டு வழங்கப்படுகிறது. பருத்தி ரகங்களுக்கு, ஒரு உருப்படிக்கு 20 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.100 என நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகையில், இதில் எது குறைவோ அந்தத் தொகை தள்ளுபடி மானியமாக வழங்கப்படும். அதேபோல், பட்டு ரகங்களுக்கு, ஒரு உருப்படிக்கு 20 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 200 என நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகையில், இதில் எது குறைவோ அந்தத் தொகை தள்ளுபடி மானியமாக வழங்கப்படும். 30 சதவீத தள்ளுபடி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, பேரறிஞர் அண்ணா அவர்களின் 117-வது பிறந்தநாளை சிறப்புடன் கொண்டாடும் வகையில், செப்டம்பர் 15, 2026 முதல் ஜனவரி 31, 2027 வரையிலான 139 நாட்களுக்கு பட்டு மற்றும் பருத்தி ரகங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது. இதன்மூலம் மேற்குறிப்பிட்ட 139 நாட்களில் பட்டு மற்றும் பருத்தி ரகங்களுக்கு மொத்தம் 30 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். இந்தச் சிறப்புத் தள்ளுபடி திட்டத்தின் மூலம் பொதுமக்கள் பயன்பெறுவதோடு, தமிழகமெங்கும் செயல்பட்டுவரும் தொடக்கக் கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் பயன்பெறும். பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு, தரமான பட்டு மற்றும் பருத்தி கைத்தறித் துணிகளைச் சிறப்புத் தள்ளுபடி விலையில் வாங்கி, கைத்தறிப் பொருட்களுக்கு ஆதரவளிக்குமாறும், நமது பாரம்பரியமிக்க கைத்தறி நெசவுத் தொழிலின் தனித்துவத்தைப் பாதுகாப்பதுடன், கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பும் நிலையான வருமானமும் கிடைத்திடத் தங்களது ஆதரவை வழங்குமாறும் கைத்தறித் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/special-offer-on-annas-birthday-30-percent-discount-on-handloom-fabrics




