சென்னை, சென்னை மயிலாப்பூரில் உள்ள காவல்துறை தடய அறிவியல் அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருபவர் அடலின் பிரபா(வயது 25). தென்காசி மாவட்டத்தை சேர்ந்த இவர், சென்னை கலங்கரை விளக்கம் பகுதியில் உள்ள மகளிர் விடுதியில் தங்கியிருந்து, தினமும் அலுவலகத்திற்கு சென்று வருகிறார். இந்நிலையில் நேற்று தாம்பரத்தில் இருந்து கடற்கரை வரை செல்லும் மின்சார ரெயிலில் அடலின் பிரபா பயணம் செய்துள்ளார். அந்த ரெயில் தாம்பரம் சானடோரியம் ரெயில் நிலையத்தில் நின்றபோது, ஜன்னல் வழியாக வடமாநில இளைஞர் ஒருவர் அடலின் பிரபாவின் கையில் இருந்த செல்போனை பறித்துள்ளார். அந்த நபரை பிடிப்பதற்காக காவல் அதிகாரி அடலின் பிரபா ரெயிலில் இருந்து இறங்க முயன்றார். அந்த சமயத்தில் ரெயில் புறப்பட்டுவிட்டதால் பிளாட்பாரத்தில் தவறி விழுந்து அடலின் பிரபாவுக்கு படுகாயம் ஏற்பட்டது. இதற்கிடையில் அங்கிருந்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபரை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரது பெயர் அஜய்(வயது 27) என்பதும், அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அதே சமயம், காயமடைந்த பெண் காவல் அதிகாரி உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரது முகத்திலும், தலையிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவருக்கு 32 தையல்கள் போடப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். செல்போன் பறிப்பில் ஈடுபட்ட வடமாநில இளைஞரை கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது அவரது மனைவி அங்கு வந்துள்ளார். அவர் போலீசாரிடம் தனது கணவரை விடுவிக்குமாறு கூறி வாக்குவாதம் செய்துள்ளார். மேலும், தனது கணவரை விடுவிக்கவில்லை என்றால் ரெயில் முன்பு பாய்ந்து விடுவேன் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார். அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்யப்பட்ட இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காயமடைந்த பெண் காவல் அதிகாரிக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/mobile-phone-snatched-from-female-police-officer-youth-from-north-india-arrested-wife-threatens-to-jump-in-front-of-a-train




