சென்னை, காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு உரிய பங்கு நீரைப் பெற த.வெ.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- “டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் சுமார் 20-க்கும் மேற்பட்ட மாவட்ட மக்கள் குடிநீருக்காக காவிரி தண்ணீரை நம்பித்தான் உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டும் காவிரியில் தமிழகத்திற்கு உள்ள உரிமையை நிலைநாட்டி பல தீர்ப்புகளை வழங்கிய பின்பும், கர்நாடக ஆட்சியாளர்கள் காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கு நீரை வழங்குவதில்லை. வெள்ள உபரிநீர் வடிகாலாக மட்டுமே தமிழகத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். கர்நாடக அரசு, காவிரியில் இருந்து ஒவ்வொரு மாதமும் தமிழகத்திற்கு தரவேண்டிய பங்கு நீரை முழுமையாக விடுவிக்கிறதா என்பதை கண்காணிப்பதுதான் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படியும் மற்றும் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் பணியாகும். சென்ற மாதம் காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு மாதந்தோறும் வழங்க வேண்டிய தண்ணீரைத் தரும்படி கர்நாடக அரசிற்கு அறிவுறுத்திய பிறகும், காவிரி மேலாண்மை ஆணையம், காவிரியில் தண்ணீரைத் திறக்க உத்தரவிடவில்லை; தமிழக அரசும் தண்ணீரைத் திறக்கும்படி கேட்கவில்லை; எனவே, தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை தரமுடியாது என்று 10 நாட்களுக்கு முன்பு கர்நாடக நீர்பாசனத் துறை அமைச்சர் உண்மைக்கு மாறாகக் கூறியிருந்தார். உடனடியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், தமிழகத்திற்குரிய பங்கு நீரைப் பெற உடனடியாக நடவடிக்கை எடுக்க த.வெ.க. அரசையும் வலியுறுத்தினோம். ஆனால், த.வெ.க. அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 TMC காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஜூன் மாதம் தரவேண்டிய 9.19 TMC தண்ணீருக்கு பதில் 2.91 TMC நீரை மட்டுமே கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. ஜூலை மாதம் திறக்கப்பட வேண்டிய தண்ணீர் 31.24 TMC நீர். 20 நாட்களில் சுமார் 21 TMC தண்ணீரை திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், கர்நாடக அரசு காவிரியில் ஜூன் மாதம் திறக்க வேண்டிய சுமார் 6.28 TMC நிலுவை தண்ணீரையும், ஜூலை மாதத்தில் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய பங்கு நீரையும் இன்றுவரை முழுமையாகத் திறந்துவிடவில்லை என்று செய்திகள் வந்துள்ளன. இந்நிலையில், கர்நாடக முதல்-அமைச்சர், கர்நாடக அணைகளில் நீர் நிரம்பிய பிறகுதான் தமிழகத்திற்கு உரிய பங்கு நீர் வழங்கப்படும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு பேசியுள்ளதாக நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. இதைக் கேட்கும்போது, 'கடலில் அலை எப்போது ஓய்வது, நாம் எப்போது குளிப்பது? என்ற பழமொழிதான் ஞாபகம் வருகிறது. கர்நாடக அணைகளில் குறிப்பிட்ட அளவு நீர் நிரம்பினாலே திறந்துவிட வேண்டும் என்பதுதான் வழிகாட்டு நெறிமுறைகள். ஆனால், அணைகள் முழுவதும் நிரம்பினால் மட்டுமே தண்ணீர் திறந்துவிடுவோம் என்பது ஒரு மோசடித்தனமான வறட்டுப் பிடிவாதமாகும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்காமலும், அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராகவும், சர்வாதிகாரி போல் நடப்பது ஒரு மாநில முதலமைச்சருக்கு அழகல்ல. பல ஆண்டுகளாக வழக்குகள் நடைபெற்று, காவிரி நதிநீர் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. அதை மதிக்காத கர்நாடக முதல்-அமைச்சருக்கு, தமிழக மக்களின் சார்பாக எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாடு முதல்-அமைச்சர், கர்நாடக அரசுடன் தொடர்புகொண்டு காவிரியில் ஜூன், ஜூலை ஆகிய இரண்டு மாதங்களாக தமிழகத்திற்குரிய பங்கு நீரைப் பெறுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காதது டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கும், தமிழக மக்களுக்கும் செய்யும் மிகப் பெரிய துரோகமாகும். ஏற்கெனவே, நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தல் பரப்புரையின்போது த.வெ.க. தலைவர், சிறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய வேளாண் கடன் முற்றிலுமாக ரத்து செய்யப்படும் என்றும், பெரு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய வேளாண் கடனில் 50 சதவீதம் ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்தார். ஆனால், ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின், குறு, சிறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் ரூ. 75,000/-ம் வரை பயிர்க் கடன் பெற்றிருந்தால் அவை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும்; ரூ. 75,000/-க்கு மேல் கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் ரூ. 35,000/- மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்தார். இதனால், தமிழகம் முழுவதும் விவசாயிகள், குறிப்பாக டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் கொதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் த.வெ.க. அரசு, டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடாததால், டெல்டா மாவட்ட விவசாயிகள் வாழ்விழந்து நிற்கிறார்கள். மேலும், விவசாயத் தொழிலையே நம்பியுள்ள லட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளர்களும் வேலை வாய்ப்பின்றி, அவர்களின் வாழ்வாதாரமும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 22-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. இக்கூட்டத்தில் கர்நாடக அரசு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழ் நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி பங்கு நீரை முழுமையாகப் பெற உறுதியான அழுத்தம் தர வேண்டும் என்று பொய்க்கால் குதிரை த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-government-must-take-steps-to-secure-tamil-nadus-rightful-share-of-water-at-the-cauvery-authority-meeting-edappadi-palaniswami-urges




