சென்னை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முடியாது என்றும், தமிழக அரசிடமிருந்து நீர் திறந்திட கோரி எந்தவொரு கோரிக்கையும் வரவில்லை என்றும் கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தி, மாநிலங்களின் ஒருமைப்பாட்டிற்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் எதிராக உள்ளது. பொறுப்பற்ற பேச்சு கர்நாடகத்தில் பருவமழை போதுமான அளவில் பெய்யாததால் தமிழகத்திற்கான தண்ணீரை வழங்க இயலாது, காவிரி மேலாண்மை வாரியமும் இதுவரை நீர் திறக்க உத்தரவிடவில்லை, மேலும் தமிழக அரசிடமிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ கோரிக்கையும் வரவில்லை என கர்நாடக அமைச்சர் கூறியிருப்பது, காவிரி நீரையே குடிநீர் மற்றும் பாசனத்திற்கான பிரதான ஆதாரமாக நம்பியிருக்கும் தமிழகத்தின் 20-க்கும் மேற்பட்ட மாவட்ட மக்களிடமும், காவிரி படுகை விவசாயிகளிடமும் கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு கேட்கவில்லை; கர்நாடக அரசு வழங்க முடியாது என்ற பொறுப்பற்ற பேச்சு சட்டவிதிமுறைகளை அவமதிப்பதாகும். கடந்த ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை இதுவரை திறக்கப்படாத நிலையில், ஜூன் மாதத்திற்கான 9.91 டி.எம்.சி மற்றும் ஜூலை மாதத்திற்கான 32 டி.எம்.சி நீரை உரிய நேரத்தில் வழங்காமல் காலதாமதப்படுத்தி வரும் கர்நாடக அரசு, தற்போது தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முடியாது என வெளிப்படையாக அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஆக்கப்பூர்வமான நடவடிக்கை ஆட்சியைத் தக்கவைக்கப் பெரும்பான்மை வேண்டி, திமுக கூட்டணியில் தவெகவிற்கு எதிராகப் பதிவான வாக்குகளின் மூலம் வெற்றி பெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை தமிழக அமைச்சரவையில் இணைத்ததுபோல், பெரும்பான்மை இல்லாத ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள வேண்டி காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை கர்நாடக காங்கிரஸ் அரசிடம் அடகு வைக்க தவெக அரசு முனைந்துவிட்டதா என்ற சந்தேகம் எழுகிறது. “எங்கு பேச வேண்டுமோ அங்கு பேசுவோம்” என்ற முதல்-அமைச்சரின் வசனத்தின் படி டெல்லி காங்கிரஸ் மேலிடத்தில் சரியான முறையில் பேசி காவேரி தண்ணீர் மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தீர்வு காண ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும். உண்மையான அக்கறை தமிழ்நாடு விவசாய சங்கங்களின் சார்பில் மேகதாது பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாக ஊடகங்கள் மூலம் வெட்ட வெளிச்சமாக தெரிந்த பின்னும் “மேகதாது அணை கட்ட ஒரு செங்கல்லைக்கூட நட்டுவைக்க அனுமதிக்க மாட்டோம்” எனறு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் மாணிக்கம் தாகூர் அவர்கள் தமிழ்நாடு மக்களை ஏமாற்றும் விதமாக அறைகூவல் விடுவதை விட்டுவிட்டு தங்களது டெல்லி காங்கிரஸ் தலைமை மூலம் காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் விதமாக உண்மையான அக்கறையுடன் செயல்பட வேண்டும். தீவிர முயற்சி எனவே, தவெக அரசு வழக்கம் போல் அமைதியாகவும் தந்திரமாகவும் இருந்து தமிழக மக்களை ஏமாற்றும் விதமாக நடந்து கொள்ளாமல் சட்ட ரீதியான துரித நடவடிக்கைகள் மூலம் தமிழகத்திற்கான உரிய நீரை உரிய நேரத்தில் பெற்றுத் தருவதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொள்வதோடு தமிழகத்தின் நீர்வள உரிமைக்கு அச்சுறுத்தலாக உள்ள மேகதாது அணைத் திட்டத்தை முற்றிலுமாக கைவிட செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என முதலல்-அமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/mekedatu-dam-issue-tamil-nadu-government-should-take-serious-action-ttv-dinakaran




