ஜெயின் மதத்தினர் ஒவ்வொரு ஆண்டும் பர்யூஷன் எனப்படும் பண்டிகையை 8 நாட்கள் கொண்டாடுவது வழக்கம். இந்த நாட்களில் ஜெயின் மதத்தினர் அதிக அளவில் வசிக்கும் பகுதியில் இறைச்சிக் கடைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அந்த மதத்தினர் கோரிக்கை விடுப்பது வழக்கமாக நடந்து வருகிறது. மகாராஷ்டிராவில் சில நகரங்களில் 8 நாட்களும் இறைச்சிக் கடைகளுக்குத் தடை விதிக்கப்படுவது வழக்கமாக நடந்து வருகிறது. தற்போது இப்பண்டிகை கடந்த செவ்வாய் கிழமை தொடங்கி இருக்கிறது. இதையடுத்து மும்பையில் உள்ள பா.ஜ.க எம்.எல்.ஏ.வுக்குச் சொந்தமான பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மதிய உணவுக்கு அசைவ உணவுகளை எடுத்து வருவதைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மும்பை பயந்தர் பகுதியில் அப்பகுதி பாஜக எம்எல்ஏ நரேந்திர மேத்தாவுக்குச் சொந்தமான செவன் ஸ்கொயர் பள்ளி செயல்படுகிறது. அப்பள்ளியின் தலைவராக நரேந்திர மேத்தாவின் மனைவி இருக்கிறார். நரேந்திர மேத்தா இப்பள்ளி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், செவ்வாய்க்கிழமை தொடங்கி 8 நாள் பர்யூஷன் காலத்தில் மாணவர்கள் தங்கள் மதிய உணவு பாக்ஸில் அசைவ உணவுகள் மற்றும் வெங்காயம், பூண்டு, பீட்ரூட், உருளைக்கிழங்கு மற்றும் பிற வேர் காய்கறிகளை கொண்டு வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது அப்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவர்கள் மீது மதப் பழக்க வழக்கங்கள் திணிக்கப்படுவதாக மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி புகார் அளித்துள்ளது. ஜெயின் மதத்தைச் சேர்ந்த மேத்தா மாணவர்களுக்கு மதக் கட்டுப்பாடுகளை விதிப்பதாக அக்கட்சியின் நிர்வாகி சச்சின் போக்லே குற்றம் சாட்டியுள்ளார். இது சம்பந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கல்வித்துறை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் பள்ளியின் இந்த நடவடிக்கையை நரேந்திர மேத்தா ஆதரித்துள்ளார். இது சத்தான உணவைச் சாப்பிட மாணவர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது என்று அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ''ஜெயின் மதம் ஒரு விஞ்ஞான மதம். வெங்காயம், பூண்டு மற்றும் உருளைக்கிழங்கு ஆரோக்கியமான உணவு அல்ல. குழந்தைகள் சத்தான உணவைச் சாப்பிடுவதை உறுதிசெய்து, இந்தப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். விநாயகர் சதுர்த்தி மற்றும் நவராத்திரி போன்ற பண்டிகைகளின் போது அல்லது மத சடங்குகளின் போது குடும்பங்கள் பொதுவாக அசைவ உணவை வீட்டில் தவிர்ப்பார்கள். பரியூஷன் காலத்தில் இதுபோன்ற கிழங்குகள் பள்ளியில் தடைசெய்யப்பட்டால், அதில் என்ன தவறு?" என்று கேட்டுள்ளார். அதேசமயம் இது நியாயமில்லை என்றும், இது பெற்றோரின் விருப்பம் என்றும், ஒவ்வொருவரும் தங்கள் சொந்த மதம் மற்றும் நம்பிக்கைகளைப் பின்பற்றுகிறார்கள், அதை குழந்தைகள் மீது திணிக்கக்கூடாது என்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகி அருந்ததி சவான் கூறினார். "ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்கள் மராத்தி கற்க ஒரு வருடம் அவகாசம்" - மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/ban-on-students-bringing-non-vegetarian-food-to-school-during-jain-festival-days




