பக்தி சிரத்தையுடன் விரதம் இருந்து, செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாள் வரலட்சுமி விரத நாள் ஆகும். இந்த விரதமானது ‘வரலட்சுமி விரதம்’ அல்லது ‘வரலட்சுமி நோன்பு’ என்று அழைக்கப்படுகிறது. வரலட்சுமி என்றால் 'வரங்களை அருளும் லட்சுமி' என்று பொருள். இந்த நாளில் மகாலட்சுமியை வழிபடுவதால் வேண்டிய வரங்களை பெறுவதுடன், அஷ்டலட்சுமிகளான ஆதி லட்சுமி, தன லட்சுமி, தானிய லட்சுமி, வீர லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி, வித்யா லட்சுமி ஆகியோரின் அருளையும் பெறலாம். சுமங்கலி பெண்கள், தங்கள் கணவன் ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் வாழ்வதற்கும், செல்வ வளம் பெருகுவதற்கும், லட்சுமியின் பரிபூரண அருளை பெறுவதற்கும் இந்த விரதத்தை மேற்கொள்கிறார்கள். வரலட்சுமி விரதத்தின் சிறப்பு ஒரு முறை மகாலட்சுமி, வயதான சுமங்கலிப் பெண் வேடம் பூண்டு, எங்கு வாசம் செய்யலாம் என்று ஒவ்வொரு வீடு வீடாக சென்றார். முதலில் ஒரு வீட்டிற்கு சென்ற போது, அங்கு பொழுது விடிந்தபிறகும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அதனால் அடுத்த வீட்டிற்கு சென்றார். அந்த வீடு சுத்தமே இல்லாமல் குப்பையாக இருந்தது. அதையடுத்து, மூன்றாவதாக மற்றொரு வீட்டிற்கு சென்றார். அந்த வீட்டில் கணவன் - மனைவி இருவரும் சண்டை போட்டுக்கொண்டிருந்தனர். எனவே, மகாலட்சுமி அடுத்த வீட்டிற்கு சென்றார். அந்த வீட்டின் வாசலில் அழகான கோலம் போடப்பட்டிருந்தது. பூஜையறையில் விளக்கு ஏற்றப்பட்டு, பக்தி பாடல்கள் ஒலித்தன. அந்த வீடே மங்களகரமாக காட்சி அளித்தது. இதைப் பார்த்த வயதான பெண் வடிவில் இருந்த மகாலட்சுமி, வீட்டிற்குள் செல்ல விரும்பினார். அவரை பார்த்த குடும்பத்தினர், வேகமாக வந்து அவரை வரவேற்று உபசரித்தனர். அவருக்கு உணவு கொடுப்பதற்காக உள்ளே சென்று வந்தபோது, திடீரென அவரை காணவில்லை. இதையடுத்து, தனது பூஜையறைக்குள் சென்றபோது, அங்கு அறை முழுவதும் செல்வம் கொட்டிக் கிடந்தது. இதைப் பார்த்த குடும்பத்தினர், வீட்டிற்கு வயதான சுமங்கலிப் பெண் வடிவில் வந்தது மகாலட்சுமிதான் என்பதை புரிந்துகொண்டனர். வரலட்சுமி விரத நாளன்று, மகா லட்சுமி தாயார் பக்தர்களின் இல்லம் தேடி வருவதாக நம்பிக்கை. எனவே அன்றைய தினம் வீட்டை சுத்தம் செய்து, விரதம் இருந்து மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வ வளம் பெருகும், வீட்டில் லட்சுமி குடிகொள்வார் என்பது நம்பிக்கை. வீட்டில் பூஜை செய்யும் முறை இந்த ஆண்டு வரலட்சுமி விரதம், ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. அன்றைய தினம் வரலட்சுமி விரதம் இருக்க விரும்பும் பெண்கள், இல்லம் தேடி வரும் மகாலட்சுமியை மனம் குளிர வரவேற்று, பூஜை செய்து சிறப்பிக்க வேண்டும். விரதம் இருப்பதற்கு முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து, அலங்கரிக்க வேண்டும். வீட்டு வாசலில் கோலமிடுவதுடன், பூஜையறை அல்லது பூஜை செய்யக்கூடிய பகுதியில் மண்டபம் அமைத்து, அதன் முன்பாகவும் கோலம் இட வேண்டும். பின்னர் மண்டபத்தில் மகாலட்சுமியின் படம் அல்லது உருவ சிலையை வைத்து மலர்களால் அழகுபடுத்த வேண்டும். அன்னையின் முன்பாக ஒரு வாழை இலையை விரித்து, அதில் பச்சரிசியை பரப்ப வேண்டும். பின்னர், நோன்பு சரடு ஒரு கலசத்தை எடுத்து, அதில் பச்சரிசியை நிரப்பி, மஞ்சள், குங்குமம் தடவி, அதன் மேல் ஒரு முழு தேங்காயை வைக்க வேண்டும். அடுத்ததாக அந்த கலசத்தை, பச்சரிசி பரப்பிய இலையின் நடுவே வைக்க வேண்டும். கலசத்திற்கு மாலை அணிவித்து, அதை மகாலட்சுமியாகவே பாவிக்க வேண்டும். அருகில் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், புடவை போன்ற பொருட்களை படைத்து, விளக்கேற்றி வழிபட வேண்டும். பூஜையில் மஞ்சள் தடவிய ஒன்பது இழையால் ஆன நோன்பு சரடை வைக்க வேண்டும். பூஜையில் அன்னைக்கு பிடித்தமான நைவேத்தியங்களை படைப்பது சிறப்பு. முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வணங்கிவிட்டு பூஜையை தொடங்க வேண்டும். பின்னர், மகாலட்சுமிக்கு மலர் தூவி, கற்பூர தீபம் காட்டி, அவருக்குரிய பாடல்களை பாடி வழிபட வேண்டும். சுமங்கலி பாக்கியம் பூஜை முடிவில், நோன்பு சரடை தங்கள் கணவன் கையால் கட்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் திருமணமாகாத கன்னிப் பெண்கள், நல்ல கணவன் அமைய வேண்டும் என்பதற்காக இந்த பூஜையில் கலந்து கொண்டு வரலட்சுமியை வழிபடலாம். வரலட்சுமி விரத நாளன்று, அன்னைக்கு படைக்கப்படும் நைவேத்தியங்களை வீட்டிற்கு வருபவர்களுக்கும், ஏழை, எளிய மக்களுக்கும் கொடுப்பது மிகவும் சிறப்பாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/devotional/varalakshmi-vratam-lakshmi-grants-desired-varam




