தேனி, தேனி மாவட்டம் மேகமலை, வருசநாடு பகுதி வன கிராம மக்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றும் முடிவை கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- வேதனை அளிக்கிறது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்துக்குட்பட்ட தும்மக்குண்டு, மேகமலை உள்ளிட்ட 98 மலை கிராமங்களில் பல தலைமுறையாக வசித்து வரும் 5000க்கும் அதிகமான மக்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்ற முயல்வது மிகுந்த வேதனை அளிக்கிறது. கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்ப் பழங்குடி மக்கள் மேகமலை, வருசநாடு பகுதி வன கிராம பகுதியில் உள்ள நிலங்களில் இலவம், முந்திரி, மிளகு, ஏலம் உள்ளிட்ட பயிர்களை விளைவித்து வருகின்றனர். வன உயிரினங்கள் பெருமளவு அழிந்துவிட்ட தற்காலச் சூழலில் இயற்கை சமநிலைப் பேணுவதில், மனிதர்களால் வளர்க்கப்படும் கால்நடைகள் பெருமளவு பங்கு வகிக்கிறது என்பதே எதார்த்த உண்மையாகும். மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்கள் காலங்காலமாக மலைகளுக்கும், காடுகளுக்கும் அவற்றில் வாழும் உயிரினங்களுக்கும் பாதுகாவலனாய் வாழ்ந்து வருகின்றனர். பன்மடங்கு அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டுள்ள நவீன உலகத்தின் அத்தனை வசதி வாய்ப்புகளையும் புறக்கணித்துவிட்டு, இன்றளவும் இயற்கையோடு இயற்கையாக வாழ்கின்ற அப்பெருங்குடி மக்கள் போற்றுதலுக்குரியவர்கள். அவர்களின் வாழ்வாதாரம் முழுக்க முழுக்கக் காடுகளையும், மலைகளையும் சார்ந்தே இருப்பினும், இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் அவர்களின் செயல்பாடுகள் ஒருபோதும் இயற்கையை அழிப்பதாகவோ, சிதைப்பதாகவோ இருந்ததில்லை. அந்த அளவுக்கு இயற்கையோடு இயைந்த வாழ்வியலை மலைவாழ் மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அம்மக்களை வெளியேற்ற வழிவகுக்கும் தீர்ப்பானது இயற்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துமே தவிர எவ்வகையிலும் பாதுகாப்பதாய் அமையாது. இயற்கையை சீரழிக்கவே வழிவகுக்கும் உண்மையில் அரசு மற்றும் தனியார் பெருமுதலாளிகள் வணிக நோக்குடன் அமைக்கும் தொழிற்சாலைகள், தொலைத்தொடர்பு கம்பிவடம் பதித்தல், மின் மற்றும் தொலைத்தொடர்பு கோபுரங்கள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்டவற்றால் மட்டுமே மலைகளும், காடுகளும், நீர்நிலைகளும் அவற்றை நம்பி வாழும் வன உயிரினங்களும் பேரழிவைச் சந்தித்து வருகின்றன. அவற்றையெல்லாம் அனுமதித்துவிட்டு, பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துவரும் பழங்குடியின மக்களையும், மலைவாழ் மக்களையும் அவர்களின் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்துவது, தனியார் முதலாளிகள் அந்நிலங்களை ஆக்கிரமித்து இயற்கையை மென்மேலும் சீரழிக்கவே வழிவகுக்கும். அதுமட்டுமின்றி, மலைக்காடுகளையும், வன உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டுமென்ற உண்மையான அக்கறை இருக்குமாயின், ஒவ்வொரு நாளும் காடுகளில் முறைகேடாக மரங்கள் வெட்டப்பட்டு டன் கணக்கில் கடத்தப்படுவதையும், சொகுசு விடுதிகள், அடுக்குமாடி கட்டிடங்கள், தண்டவாளங்கள், சாலைகள், தொழிற்சாலைகள், தொலைத்தொடர்பு கருவிகள், அறிவியல் ஆய்வகங்கள் ஆகியவை அமைப்பதற்காக, வன விலங்குகளின் வாழ்விடங்களும், வழித்தடங்களும் சுருக்கப்படுவதையும் தடுத்து நிறுத்த தீவிர நடவடிக்கை எடுப்பதே சரியானதாக இருக்கும். முடிவைக் கைவிட வேண்டும் ஆகவே, தமிழ்நாடு அரசு கடந்த 2006ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின்படி தேனி மாவட்டம் மேகமலை, வருசநாடு பகுதி வன கிராம மக்களுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்குவதோடு, மலைக் கிராமங்களை விட்டு மக்களை வெளியேற்றும் முடிவைக் கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-decision-to-evict-the-people-of-the-megamalai-and-varusanadu-forest-villages-must-be-abandoned-seeman




