Full Article
மனம் போன போக்கில் கட்சி மாறும் அரசியல் காட்சிகளை வட இந்தியாவில் 'ஆயா ராம் காயா ராம்' என விமர்சிப்பார்கள். அந்த ஆயா ராம் காயா ராம் அரசியலை முதல்வர் விஜய் தமிழகத்திலும் வேகமெடுக்க வைக்கிறாரோ எனும் கேள்வி எழுந்திருக்கிறது. TVK Vijay 1967 தேர்தலில் ஹரியானாவில் காயா லால் உட்பட 16 சுயேட்சைகள் வெல்கிறார்கள். சுயேட்சைகளின் ஆதரவோடு மட்டுமே அரசு அமைக்க முடியும் எனும் சூழல். அப்போது முதலில் காங்கிரஸை ஆதரிக்கிறேன் எனக் கூறிய காயா, சில மணி நேரத்திலேயே ஐக்கிய முன்னணிக்கு ஆதரவு தெரிவிக்கிறார். அத்தோடு நிற்கவில்லை. இன்னும் சில மணி நேரத்தில் மீண்டும் காங்கிரஸூக்கு தாவி அங்கிருந்து மீண்டும் ஐக்கிய முன்னணிக்கு தாவுகிறார். இத்தனை காட்சிகளும் ஒரே நாளில் நடக்கிறது. அங்கிருந்துதான் அணி தாவும் அரசியலுக்கு 'ஆயா ராம் காயா ராம்' எனும் பெயர் வந்தது. மக்களின் முடிவை துளி கூட மனதில் ஏற்றிக்கொள்ளாமல், அதற்கு குறைந்தபட்ச மதிப்பை கூட கொடுக்காமல் இருக்கும் அரசியலர்களுக்கு கடிவாளம் போடத்தான் 1985 இல் கட்சித் தாவல் தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. ஒரு கட்சியின் எம்.எல்.ஏக்கள் இன்னொரு கட்சிக்கு மாற வேண்டுமெனில், மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் அணி மாறினால் மட்டுமே அவர்களின் பதவி காப்பாற்றப்படும். அதற்கு குறைவான எண்ணிக்கையில் எம்.எல்.ஏக்கள் அணி தாவினால் தகுதிநீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விதி மக்களின் முடிவுகளுக்கு மாறாக அணி தாவ நினைக்கும் எம்.எல்.ஏக்களை கட்டுப்படுத்தும் என நினைத்தனர். ஆனால், இந்தியாவில் எப்போது ஒரு விதிமுறையோ சட்டமோ அமல்படுத்தப்படுகிறதோ, அப்போதே அந்த சட்ட விதிகளிலிருந்து கசிந்து தப்பிக்கும் ஓட்டைகளும் உருவாக்கப்படும். TVK Vijay - தவெக விஜய் அப்படி கட்சித்தாவல் தடைச் சட்டத்தை நீர்த்து போகச் செய்ய கண்டுபிடிக்கப்பட்டதுதான் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு அணிதாவும் முறை. ஒரு எம்.எல்.ஏ எப்போது எந்த சூழலில் ராஜினாமா செய்ய வேண்டுமென மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் எந்த கட்டுப்பாடும் இல்லை. இதனால் அணி தாவ விரும்பும் எம்.எல்.ஏக்கள் முதலில் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சிக்கு தாவி, ராஜினாமா செய்த அதே தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிடுவார்கள். தமிழ்நாட்டில் இப்போது நடந்து கொண்டிருக்கிற நடக்கப்போகிற காட்சிகளும் இதுதான். முதல்வர் விஜய்யின் திருச்சி கிழக்கை தவிர்த்து இதுவரை 6 அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்திருக்கின்றனர். அவர்களில் நால்வர் தவெகவில் இணைந்துவிட்டனர். மீதமுள்ள இருவரும் வெகுவிரைவில் தவெகவில் இணையவிருக்கின்றனர். 'அவர்களாக தங்கள் கட்சியிலிருந்து விலகி விரும்பி எங்கள் கட்சியில் இணையும் போது எப்படி தடுக்க முடியும்?' என படு விவரமாக தவெகவினர் வாதத்தை முன்னெடுத்து வைக்கின்றனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது கட்சியின் பொதுக்குழுவில் பேசும் போதும், அதன் பிறகான பத்திரிகையாளர் சந்திப்பிலும், 'முதல்வரை சந்தித்த போது உங்களின் எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய சொல்லுங்கள். இடைத்தேர்தலில் நானே வந்து பிரசாரம் செய்கிறேன் என்றார்' எனப் பேசியிருந்தார். TVK Vijay | விஜய் வைகோவின் கூற்றை வைத்து பார்க்கையில் தவெகவினரின் கூற்று அடிபட்டு போகிறது. தவெக தரப்பிலிருந்து முதல்வர் விஜய் அதிமுக முகாமுக்கு எதோ ஒரு வலையை வீசியிருக்கிறார். அதைப் பிடித்துக் கொண்டுதான் அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்தார்களோ எனும் சந்தேகம் தானாகவே எழுகிறது. தன்னுடைய கட்சியை தூய சக்தி என அடையாளப்படுத்திக் கொள்ளும் முதல்வர் செய்கிற வேலையா இது எனும் அதிர்ச்சி மக்களுக்கே எழத் தொடங்கியிருக்கிறது. `முதல்வர் ராஜினாமா செய்ய சொல்லவில்லை. நான் தான் ராஜினாமா பற்றி பேசினேன்' என பதறிப்போய் தோசையை மாற்றிப் போட்டு தன் மீதான நம்பகத்தன்மையை மீண்டும் ஒரு முறை கேள்விக்குள்ளாக்கவும் செய்திருக்கிறார் வைகோ. இதே வைகோதான் 2006 இல் தன்னுடைய எம்.எல்.ஏ ஒருவர் ராஜினாமா செய்துவிட்டு அப்போதைய ஆளுங்கட்சியான திமுகவில் இணைந்து இடைத்தேர்தலில் போட்டியிட்டதாக சமீபத்தில் விமர்சித்தும் பேசியிருந்தார். காலத்துக்கு ஏற்றார் போல அறமும் நீதியும் தங்களின் அளவுகோலை மாற்ற முடியாதே. அதேமாதிரி, முதல்வர் விஜய்யும் தன் மீதான நம்பகத்தன்மை சலவை செய்துகொள்ளும்படி ஒரு புதிய வாஷிங் மெஷினை இறக்கியிருக்கிறார் போல. எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது நிறைய வழக்குகளும் அரசியல் சர்ச்சைகளும் இருக்கிறது. அவர்கள் தவெகவில் இணைந்தால் அந்த வழக்குகளெல்லாம் என்ன ஆகும்? அவை நியாயப்படி விசாரிக்கப்பட்டும் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? தேர்தலில் எதிர்முகாமில் நிற்கும் வரை ஊழல் சக்திகளாக இருந்தவர் முதல்வரின் கட்சியில் இணைந்தவுடன் எப்படி உத்தமர்களாக மாற முடியும்? TVK Vijay - விஜய் தேர்தல் முடிவுகள் வெளியாகி தவெக ஆட்சியமைக்க சிரமப்பட்டுக் கொண்டிருந்த போது, திமுக ஆதரவில் அதிமுக ஆட்சியமைப்பதை பற்றி பேசப்பட்டது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அத்தனை குரல்களும், 'இது மக்களின் முடிவுக்கு எதிரான சிந்தனை' என ஒரு சேர எதிர்த்தன. இப்போது அதே அளவுகோலை வைத்தே தவெகவின் செயல்பாடுகளையும் அலச முடியும். பெருவாரியாக இரட்டை இலைக்கு வாக்களித்து தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதியை தன்னுடைய முகாமுக்கு இழுத்து, அடுத்த இடைத்தேர்தலில் விசில் சின்னத்தில் அதே நபரை நிற்க வைக்கலாம் எனும் சிந்தனை சரியானது தானா?, ஒருவேளை சரி என்பீர்கள் எனில், தவெகவுக்கு மக்களின் முடிவு மீது என்ன மரியாதைதான் இருக்கிறது? கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் ஓட்டைகள் அடைக்கப்பட வேண்டியதன் தேவையையும் தமிழக அரசியலில் தற்போது நடக்கும் காட்சிகள் ஆழமாக உணர்த்துகின்றன. ராஜினாமா செய்துவிட்டு அப்படியே தலைகீழாக கட்சி மாறி இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்கிற குறுக்கு சிந்தனைக்கு கடிவாளம் போட்டே தீர வேண்டும்.! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Full article — see link below




