செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரத்தில் பிறந்து வளர்ந்தவர் மௌலீஸ்வரி. படிப்பு, வேலை, குடும்பம் என வழக்கமான வாழ்க்கைப் பாதையில் பயணித்துக் கொண்டிருந்த அவருக்கு, ஒரு கட்டத்தில் மலைகள் மீது தனி ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. கிளிமஞ்சாரோ மலை ஏறிய அவர், சமீபத்தில் எல்ப்ரூஸ் மலை ஏறியிருக்கிறார். இந்நிலையில் மலையேறும் பயண அனுபவம் குறித்து மௌலீஸ்வரிடம் பேசத் தொடங்கினோம். மலையேறும் ஆர்வம் குறித்து நம்மிடம் பகிர்ந்த அவர், “சின்ன வயசுல இருந்தே விளையாட்டுல எனக்கு ஆர்வம் இருந்துச்சு. ஸ்கூல்ல தடகளம், லாங் ஜம்ப், ட்ரிபிள் ஜம்ப் மாதிரியான போட்டிகள்ல கலந்துப்பேன். காலேஜ் போனதுக்கப்புறம் பரதநாட்டியம் கத்துக்கிட்டேன். வாழ்க்கையில ஒவ்வொரு கட்டத்துலயும் ஏதாவது புதுசா கத்துக்கணும்னு எனக்கு ஒரு ஆர்வம் இருந்துகிட்டே இருந்துச்சு. மௌலீஸ்வரி 2019-ல மவுண்டனியரிங் பத்தி தேட ஆரம்பிச்சேன். அப்போதுதான் மலை ஏறுறதுக்குத் தேவையான பயிற்சிகள், கோர்ஸ்கள் எல்லாம் இருக்குனு தெரிஞ்சது. ஒரு கட்டத்துல பயிற்சி வாய்ப்பும் கிடைச்சது. ஆனா, வேலை காரணமாக அந்த வாய்ப்பைப் பயன்படுத்த முடியல. என்னோட கனவு அப்படியே தள்ளிப்போச்சு. ஆனா, மலை மேல இருந்த ஆர்வம் மட்டும் குறையவே இல்ல. ஏற்கெனவே பாக்ஸிங் பண்ணிட்டு இருந்தாலும், மலை ஏறணும்னு முடிவு பண்ணிய பிறகு என்னோட உடல் தகுதியை இன்னும் அதிகப்படுத்த ஆரம்பிச்சேன். தினசரி உடற்பயிற்சி, இரவு நேர நடைப்பயிற்சி, நீண்ட நேரம் நடக்குற பயிற்சி என என்னை நானே தயார்படுத்திக்கிட்டேன். அதுக்கப்புறம்தான் மவுண்ட் கிளிமஞ்சாரோ எனக்கு ஒரு கனவா மாறுச்சு. 5,895 மீட்டர் உயரம் கொண்ட கிளிமஞ்சாரோ! கிளிமஞ்சாரோ மலையை நோக்கிய என்னுடைய பயணம் எட்டு நாள்கள் நீடித்தது. ஒவ்வொரு நாளும் மேலே ஏற ஏற நிலப்பரப்பும் மாறிக்கொண்டே இருந்தது. பசுமையான காடுகள், வறண்ட நிலப்பரப்பு, அதற்குப் பிறகு பனியால் மூடப்பட்ட மலை என இயற்கையின் பல்வேறு முகங்களை ஒரே பயணத்தில் பார்க்க முடிந்தது. ஆனால், உச்சியை அடைய வேண்டிய அந்த இரவு மிகவும் கடினமாக இருந்தது. மௌலீஸ்வரி கடும் குளிர், கால் வலி, உடல் சோர்வு என அனைத்தும் ஒரே நேரத்தில் வந்தது. ஒரு கட்டத்தில், என்னால் முடியுமா? என்றுகூட தோன்றியது. ஆனால், என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன். இன்னும் கொஞ்ச தூரம்தான்… போயிடலாம் என நினைச்சு ஒவ்வோர் அடியாக முன்னேறினேன். கடைசியில் அந்த உச்சியை அடைந்து நின்ற அந்த நிமிடத்தை என்னால் வார்த்தைகளால் சொல்லவே முடியாது. நான் ஏற்கெனவே நிறைய விஷயங்களில் முயற்சி செய்து, சில இடங்களில் தோல்வியையும் சந்தித்திருக்கிறேன். ஆனால், அந்த சிகரத்தில நின்றபோது, நம்மால் முடியுமென நம் மேல் நாம் நம்பிக்கை வைத்தால், எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போக முடியும் என்று எனக்குத் தோன்றியது. மவுண்ட் எல்ப்ரூஸ் கிளிமஞ்சாரோவுக்குப் பிறகு என்னுடைய அடுத்த இலக்கு மவுண்ட் எல்ப்ரூஸ். இந்த முறை பயணம் இன்னும் சவாலானதாக இருந்தது. பனியில் நடப்பதற்கான காலணிகள், பனிக்கோடரி, கயிறு, பாதுகாப்பு இடுப்பு அணிகலம் என தொழில்நுட்ப ரீதியான மலை ஏற்றப் பயிற்சியும் தேவைப்பட்டது. கடும் பனிப்பொழிவு, குளிர் என அனைத்துக்கும் நடுவில், இரவு நேரத்தில் தலையில் பொருத்திய விளக்கின் வெளிச்சத்தில் சிகரத்தை நோக்கி நடந்தோம். ஒருவருக்கொருவர் கயிறு மற்றும் பாதுகாப்பு உபகரணங்களால் இணைந்துதான் முன்னேற வேண்டியிருந்தது. மௌலீஸ்வரி சில நேரங்களில் பயமும் வந்தது. ஆனாலும், அந்த பயத்தையும் தாண்டி தொடர்ந்து நடந்தேன். இறுதியில் எல்ப்ரூஸ் உச்சியையும் அடைந்தேன். அந்த இரண்டு மலைகளும் எனக்கு இரண்டு வெற்றிகள் மட்டும் இல்லை. இரண்டு மலைகள்… இரண்டு கண்டங்கள்… இரண்டு உச்சிகள். ஆனால், என்னைப் பொறுத்தவரை இந்தப் பயணத்தின் உண்மையான வெற்றி சிகரத்தை அடைந்ததில் மட்டும் இல்லை. மலை எனக்கு ஒரு விஷயத்தைக் கற்றுக்கொடுத்திருக்கிறது. மலைக்கு மேல் இருப்பது மட்டும உச்சி அல்ல. பயத்தையும், சந்தேகத்தையும் தாண்டி நாம் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியிலும் உச்சி இருக்கிறது. இன்னும் எனக்கு மலைகள் மேல் இருக்கின்ற அந்த ஈர்ப்பு குறையவில்லை” என்கிறார் மௌலீஸ்வரி நெகிழ்ச்சியாக. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/lifestyle/mouleeswari-shares-her-mountaineering-experience




