தமிழ்நாடு சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாக திருநாவுக்கரசு உள்பட 9 பேரை திருவல்லிக்கேணி காவல்துறை கைது செய்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த குதிரைபேர விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், அவரது தம்பி அசோக் குமாருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து, விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர்கள் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகினர். இதையடுத்து இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் இருவரும் மனு தாக்கல் செய்தனர். என்.ஆர். இளங்கோ இந்த மனுக்கள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையில் நடந்தது குறித்து திமுக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர். இளங்கோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது, கொறடாவின் உத்தரவை மீறி எதிராக வாக்களித்தால் 35 கோடி ரூபாய் தருவதாகக் கூறி புகார் ஒன்று அளிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில், ஜூன் 26-ம் தேதி இரவு 10 மணியளவில் தொலைபேசி அழைப்பு வந்ததாக FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஜூன் 29-ம் தேதி வரை இதுகுறித்து எந்தப் புகாரையும் அளிக்கவில்லை. இந்த இரண்டு நாட்கள் இடைவெளியில், சட்ட ரீதியாக என்னென்ன வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு, ஒரு போலியான புகாரை உருவாக்கியிருக்கிறார் என்று வாதாடப்பட்டது. சட்டமன்ற உறுப்பினரிடம் பேசியதாகச் சொல்லப்படும் முதல் எதிரியான கோவிந்தராஜ், தான் பேசியது உண்மைதான். ஆனால் தான் ஒரு தேர்தல் முடிவுகளை ஆராயும் 'செபாலஜிஸ்ட்' (Cephologist) என்பதால் அரசியல் ரீதியாகவும், தேர்தல் முடிவுகள் குறித்தும் மட்டுமே பேசினேன் என்றும் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும், செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமாருக்கு எதிராக எந்தவொரு நேரடி சாட்சியமும் இல்லை. சென்னை உயர் நீதிமன்றம் காவல்துறையினரிடம் பெறப்பட்ட, நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஒரே நாளில் திருநாவுக்கரசு மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் ஈரோட்டில் வேறு வேறு இடங்களில் இருந்ததாகக் காட்டும் Call Detail Record ஆதாரங்களைத் தவிர, அரசு தரப்பிடம் வேறு எந்த வலுவான ஆதாரமும் இல்லை. தி.மு.க மற்றும் செந்தில் பாலாஜி மீது கலங்கம் விளைவிக்கும் நோக்கில், "அரசை கவிழ்க்கும் எண்ணத்தோடு இது செய்யப்பட்டது" என அரசு தரப்பு தொடர்ந்து கூறி வந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களை போலீஸ் காவலில் எடுப்பதற்கான மனுவிலும் இதையே குறிப்பிட்டிருந்தனர். ஆனால், சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிப்பது என்பது தானாகவே அரசை கவிழ்க்கும் செயலாகாது. புகாரில் எங்குமே 'அரசை கவிழ்க்க வேண்டும்' என்று கூறவில்லை என வாதிடப்பட்டது. இந்த வாதத்தை அடுத்து, ஜாமீன் மனுவிற்கு எதிராக அரசு தரப்பு தாக்கல் செய்த 'கவுண்டர் அபிடவிட்டில்' இருந்து "அரசை கவிழ்க்கும் சதி" என்ற வார்த்தையை அவர்களே நீக்கிவிட்டனர். இதனால் ஒட்டுமொத்த FIR-ரும் நீர்த்துப் போய்விட்டது. பொதுவாக குற்றப்பத்திரிகை (Charge Sheet) தாக்கல் செய்யும் வரை வழக்கு ஆவணங்கள் பொதுவெளியில் கிடைக்காது. ஆனால், இந்த வழக்கில் ஜூன் 30-ம் தேதி மாலை கைது செய்யப்பட்டு, ஜூலை 1-ம் தேதி மதியத்திற்கு மேல் தான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதற்குள்ளாகவே, ஜூலை 1-ம் தேதியிட்ட அரசின் அதிகாரப்பூர்வ பத்திரிகை செய்திக்குறிப்பில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்கு இதில் தொடர்பிருப்பதாக வெளியிடப்பட்டது. செந்தில் பாலாஜி - அசோக் குமார் மேலும், ஜூலை 9-ம் தேதியிட்ட செய்திக்குறிப்பிலும் வழக்கின் முழு விவரங்களையும் பொதுவெளியில் வெளியிட்டனர். தி.மு.க மற்றும் செந்தில் பாலாஜி மீது அரசியல் ரீதியாகக் கலங்கம் விளைவிக்கவே காவல்துறை பொதுவாகச் செய்யாத நடைமுறையை இந்த வழக்கில் செய்துள்ளது என வாதிட்டோம். நீதிமன்றம் இந்த வாதங்கள் அனைத்தையும் கவனத்தில் கொண்டு, செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் ஆகிய இருவருக்கும் கைது செய்ய முடியாதவாறு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. முழுமையான நீதிமன்ற உத்தரவு நகல் இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்றாலும், நிபந்தனை ஜாமீனாக இருவரும் தினம்தோறும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் காலையிலும் மாலையிலும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது." என்றார். செந்தில் பாலாஜிக்கு மீண்டும் தலைவலி; பண மோசடி வழக்கை விசாரிக்க ஆளுநர் 'கிரீன்' சிக்னல்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/court-granted-anticipatory-bail-to-senthil-balaji-and-his-brother-ashok-kumar




