வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள பெரும்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏ.டி.கே தினேஷ் என்கிற தினேஷ்குமார். பத்திரிகை ஒன்றில் அந்தப் பகுதி நிருபராக சுற்றிவந்த தினேஷ்குமார் மீது ஏற்கெனவே மிரட்டல், பணம் பறிப்புப் போன்ற பல்வேறு புகார்கள் இருக்கின்றன. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியனையும் அடிக்கடி குடியாத்தம் பகுதிக்கு அழைத்து வந்து போஸ்டர் அரசியல் செய்துவந்தார் தினேஷ்குமார். தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதுபோல, கட்டப்பஞ்சாயத்து கும்பலுடனும் சேர்ந்து கொண்டு அடாவடி செயல்களில் ஈடுபட்டுவந்ததாகவும் அவர்மீது குற்றச்சாட்டுகள் நீள்கின்றன. இந்த நிலையில், கடந்த 2024-ம் ஆண்டு குடியாத்தம் ஆர்.எஸ் பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்துவந்த கல்யாணி (எ) மோனிஷா என்ற பெண்ணிடம் `தூரத்து உறவினர்’ எனக்கூறி அறிமுகமாகியுள்ளார் தினேஷ்குமார். மோனிஷாவின் சொந்த ஊர் பேரணாம்பட்டு அருகேயுள்ள செண்டத்தூர் கிராமம். அவரின் கணவர் சரவணன் சென்னையில் வேலை செய்து வந்ததால், தனியாக வீடு எடுத்து தங்கவைக்கப்பட்டிருந்தார் மோனிஷா. தினேஷ்குமார் இதைத் தெரிந்து கொண்டுதான் மோனிஷாவிடம் பேச்சுக்கொடுத்து பழகியுள்ளார் தினேஷ்குமார். தொடர்ந்து இருவரும் நட்பாக பழகவே, அந்தப் பெண்ணிடமிருந்து சிறிது சிறிதாக இருபத்தைந்தாயிரம் ரூபாய் வரை பணம் வாங்கியுள்ளார் தினேஷ்குமார். இதனிடையே, இலவச வீட்டு மனைப் பட்டாவுக்கு விண்ணப்பித்திருந்தார் மோனிஷா. `எனக்கு அதிகாரிகளைத் தெரியும். பணம் செலவாகும்’ என்று கூறி, இரண்டு லட்சம் ரூபாயை வாங்கியுள்ளார் தினேஷ்குமார். இந்த பணம் கைமாறிய நேரத்திலேயே, விண்ணப்பத்தின் அடிப்படையில் மோனிஷாவுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதையும் தெரிந்துகொண்ட தினேஷ்குமார், போலியான சர்வேயர்களையும் அழைத்துச் சென்று போக்குக் காட்டி மேலும் பணம் கேட்டு தொந்தரவு கொடுத்துவந்துள்ளார். இவர்கள் மோசடியாளர்கள் எனத் தெரியவந்ததும், பணத்தை திரும்பக் கேட்டுள்ளார் மோனிஷா. பணத்தை திரும்பத் தர மறுத்த தினேஷ்குமார் கொலை மிரட்டல் விடுக்கத் தொடங்கினார். இந்த நிலையில்தான் கடந்த 17-ம் தேதி மாலை 4 மணியளவில், குடியாத்தம் பேருந்து நிலையத்தில் ஆம்பூர் செல்வதற்காக காத்திருந்த மோனிஷாவைப் பார்த்துவிட்டு அவரின் அருகில் சென்ற தினேஷ்குமார், `பட்டா நிலத்தின் மதிப்பு ரூ.16 லட்சம். மேலும் எனக்குப் பணம் கொடு. இல்லைனா, பட்டா நிலத்தை என் பெயரில் எழுதி கொடுத்துவிடு’ எனக்கூறி பகிரங்கமாக மிரட்டியுள்ளார். தொடர்ந்து, `தனியாக பேச வேண்டும். திருவண்ணாமலைக்குப் போகலாம் வா’ என்றும் அழைத்துள்ளார் தினேஷ்குமார். அவருடன் செல்ல மறுத்ததால், பொது இடம் என்றுகூடப் பார்க்காமல், மோனிஷாவை அச்சில் ஏற்ற முடியாத தகாத சொற்களால் திட்டி தாக்கியுள்ளார் தினேஷ்குமார். கைது மேலும், `உன் புருஷனை விட்டுவிட்டு என்கூட வந்து வாழணும். இல்லைனா, உன் முகத்துல ஆசிட் அடித்து கொன்னுடுவேன். உன் புருஷனையும் லாரி ஏத்தி சாகடிச்சிடுவேன்’ எனவும் மிரட்டல் விடுத்தாராம் தினேஷ்குமார். இதனிடையே, தினேஷ்குமார் மோனிஷாவை போனில் தகாத சொற்களால் திட்டிய ஆடியோ உரையாடல்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, மோனிஷாவின் கணவர் சரவணனையும் நெல்லூர்பேட்டை என்கிற பகுதியில் தினேஷ்குமார் வழிமறித்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து இரண்டாயிரம் ரூபாயைப் பறித்துச் சென்றுள்ளார். இது தொடர்பாக, குடியாத்தம் நகரக் காவல் நிலையத்தில் மோனிஷாவும், அவரின் கணவர் சரவணனும் இரு புகார்களாக தினேஷ்குமார் மீது கொடுத்தனர். புகார்களின் அடிப்படையில், பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், தினேஷ்குமாரைக் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்திருக்கின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/crime/gudiyatham-man-arrested-for-defrauding-woman-money-and-issuing-death-threats




