நாகப்பட்டினம், நாகையை அடுத்த வடக்குப் பொய்கைநல்லூர் கிராமத்தில் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு திருவிழா கடந்த மாதம் 31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. தீமிதி நிகழ்வை முன்னிட்டு வடக்கு பொய்கை நல்லூர் குளக்கரையில் இருந்து பூங்கரகம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து காப்பு கட்டி விரதமிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலின் முன் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் வடக்கு பொய்கைநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பௌர்ணமி விழா ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள கீழச்சாக்குளம் கிராமத்தில் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய புரட்டாசி மாத பௌர்ணமி திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுகளுடன் துவங்கியது. தினந்தோறும் வீரமாகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்று வந்தது. திருவிழாவின் நிறைவு நிகழ்வாக, ஊர் மக்கள் ஒன்று கூடி வீரமாகாளி அம்மன் கோவிலில் பொங்கல் வைத்து, 108 திருவிளக்கு பூஜை நடத்தி வழிபட்டனர். இந்த ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என அம்மனிடம் வேண்டிக்கொண்டனர். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. அதன்பின் அம்மன் கோவிலை சுற்றி பெண்கள் மற்றும் சிறுமிகள் ஒன்று கூடி கும்மியடித்து அம்மனை போற்றி வணங்கினர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/devotional/nagai-fire-walking-festival-at-draupadi-amman-temple-in-north-poigai-nallur



