ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஆடவர் டிரிப்பிள் ஜம்ப் இறுதிப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பிரவீன் சித்ரவேல் வெள்ளிப் பதக்கமும், செல்வ பிரபு திருமாறன் வெண்கலப் பதக்கமும் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கின்றனர். ஆடவர் டிரிப்பிள் ஜம்ப் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பிரவீன் சித்ரவேல் 16.58 மீட்டர் தாண்டி வெள்ளிப் பதக்கத்தையும், செல்வ பிரபு திருமாறன் 16.52 மீட்டர் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றி இருக்கின்றனர். பிரவீன் சித்ரவேல் இந்த வெற்றி எளிதாகக் கிடைத்ததல்ல. முதல் மூன்று முயற்சிகள் முடிவில் பிரவீன் சித்ரவேல் ஐந்தாவது இடத்தில் இருந்தார். பதக்க வாய்ப்பு மங்கியிருந்த நிலையில், நான்காவது முயற்சியில் 16.58 மீட்டர் பாய்ந்து நேரடியாக இரண்டாவது இடத்துக்கு முன்னேறி வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார். மறுபுறம், செல்வ பிரபு திருமாறனின் நான்காவது முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆனால், ஐந்தாவது முயற்சியில் 16.52 மீட்டர் தாண்டி பதக்கப் பட்டியலில் இடம்பிடித்தார். குறிப்பாக, நியூசிலாந்தின் ஈதன் ஒலிவியரை வெறும் 2 சென்டிமீட்டர் வித்தியாசத்தில் பின்னுக்குத் தள்ளி வெண்கலத்தைக் கைப்பற்றியது போட்டியின் பரபரப்பான தருணமாக அமைந்தது. CWG: காமன்வெல்த் போட்டியில் அடுத்தடுத்து தங்கம்; சாதனை படைத்த ப்ரீத்தி பவார், ஜாஸ்மின்! பிரவீன் சித்ரவேல் 24 வயதான பிரவீன் சித்ரவேல், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். விவசாயக் கூலித் தொழிலாளியின் மகனான இவர், 2018 கேலோ இந்தியா பள்ளி விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் கவனம் பெற்றார். அதே ஆண்டில் யூத் ஒலிம்பிக்கில் டிரிப்பிள் ஜம்ப்பில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்தார். தற்போது தேசிய சாதனையாளராகவும், ஒலிம்பியனாகவும் இருக்கும் பிரவீன், ஏற்கெனவே ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம், ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளி, FISU உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். செல்வ பிரபு திருமாறன் செல்வ பிரபு திருமாறன் மதுரையைச் சேர்ந்த செல்வ பிரபு திருமாறனும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவரே. 2022 உலக ஜூனியர் (U-20) தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற இவர், பின்னர் ஆசிய தடகள சங்கத்தின் சிறந்த 20 வயதுக்குட்பட்ட ஆண் வீரர் விருதையும் பெற்றார். அமெரிக்காவின் கான்சாஸ் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்று வரும் அவர், இந்த ஆண்டின் NCAA Division I வெளிப்புற தடகள சாம்பியன்ஷிப்பிலும் பட்டம் வென்று, 17 மீட்டர் தடையைத் தாண்டிய இந்திய வீரர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். 2022 பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் டிரிப்பிள் ஜம்ப்பில் எல்தோஸ் பால் தங்கமும், அப்துல்லா அபூபக்கர் வெள்ளியும் வென்றிருந்தனர். அதனைத் தொடர்ந்து, 2026 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியிலும் டிரிப்பிள் ஜம்ப்பில் இந்தியா இரண்டு பதக்கங்களை வென்றிருப்பது, இந்தப் பிரிவில் இந்தியா தொடர்ந்து வலுவான அணியாக உருவெடுத்து வருவதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. CWG: "என் கவலைகளை ChatGPT- உடன் பகிர்ந்தேன்" - டெகாத்லான் போட்டியில் வெண்கலம் வென்ற தேஜஸ்வின் சங்கர் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://sports.vikatan.com/cwg-2026-tamil-nadu-athletes-win-two-medals-in-the-triple-jump-event




