சென்னை, விவசாய நிலத்தை வகை மாற்றம் செய்ய உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி கட்டாயம் என்பதை நீக்குவதற்கான சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாட்டில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்களுக்கு விவசாய நிலங்களை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இது கவலை அளிக்கிறது. இதனால் விவசாய நிலங்களின் பரப்பளவும், உணவுப் பொருட்களின் உற்பத்தியும் குறைவதோடு, உணவுப் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் விவசாயிகளின் நலன்களும், வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். இந்த நிலையில் விவசாய நிலங்களை மேம்பாட்டு திட்டங்களுக்கு பயன்படுத்துவதற்காக, நில வகை மாற்றம் செய்வதற்கு இருந்து வந்த தடைகளை நீக்க தமிழ்நாடு அரசு முயல்கிறது. இது சரியல்ல. விவசாய நிலங்களை வகைப்பாடு மாற்றுவதற்கு 2017-ம் ஆண்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அவற்றை தளர்வு செய்ய தற்பொழுது முயற்சிகள் நடைபெறுகின்றன. அதன் ஒரு பகுதியாக, தற்பொழுது நகர், ஊரமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள சட்டத்திருத்த மசோதா ஒன்றை தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் அறிமுகம் செய்துள்ளது. அதில் நில மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தும்போது நன்செய் வகைப்பாட்டு நிலங்களை பயன்படுத்த வேண்டிய தேவை எழுகிறது. இதற்கு உள்ளாட்சி அமைப்பு மற்றும் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறுவது கட்டாயம் என்பது நீக்கப்படுகிறது. அதேபோல் உள்ளாட்சிகளிடம் உள்ள அனுமதி வழங்கும் அதிகாரத்தை நகர் மற்றும் ஊரக அமைப்பு இயக்குனருக்கு மாற்ற இந்த மசோதா வகை செய்கிறது. இது உள்ளாட்சிகளின் அதிகாரத்தை பறிக்கும் செயலாகும். எனவே, இம்மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/drop-agricultural-land-reclassification-amendment-bill-mu-veerapandian




