சென்னை, மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட வீரதீரச் செயலுக்கான சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா விருதை முதல்-அமைச்சர் விஜய் இன்று வழங்கிச் சிறப்பித்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- முதல்-அமைச்சர் விஜய் இன்று (27.8.2026) தலைமைச் செயலகத்தில், மத்திய அரசின் 2025-ம் ஆண்டுக்கான வீரதீரச் செயலுக்கான ‘சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா’ விருதினைப் பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டம், எலுவப்பள்ளி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் காலஞ்சென்ற தலைமை ஆசிரியர் பி.எஸ். கெளரிசங்கர் ராஜாவின் மனைவியிடம் ‘சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா’ (மிகச்சிறந்த உயிர்ப் பாதுகாப்பு) விருதுக்கான பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கிச் சிறப்பித்தார். ஆண்டுதோறும் வீரதீரச் செயலுக்கான ‘சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா’ விருதுக்கான பரிந்துரைகள் அனைத்து மாநில அரசுகளிடமிருந்தும் மத்திய அரசால் பெறப்பட்டு, ஜனாதிபதியால் விருதாளர்கள் தெரிவுசெய்யப்பட்டு அறிவிக்கப்படுவர். கடந்த 5.3.2025 அன்று, கிருஷ்ணகிரி மாவட்டம், எலுவப்பள்ளி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், மதிய உணவு இடைவேளையின்போது, மூன்றாம் வகுப்புப் படிக்கும் 8 வயதான சிறுவன் நிதின், பள்ளி வளாகத்திற்கு அருகில் அமைந்திருந்த விவசாயப் பண்ணைக் குட்டையில் தற்செயலாக வழுக்கி விழுந்தான். அச்சிறுவன் ஆபத்தான நிலையில் தத்தளித்து, நீரில் மிதக்கப் போராடுவதைக்கண்ட பி.எஸ்.கெளரிசங்கர் ராஜா, அச்சிறுவனைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளை மேற்கொண்டபோதிலும், இருவரும் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தனர். மறைந்த பி.எஸ்.கௌரிசங்கர் ராஜாவின் வீரதீரச் செயல், அசாதாரண துணிச்சல், உன்னத தியாகம் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, அவர் மரணத்திற்குப் பிந்தைய ‘சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா’ விருதுக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி கொ. சிரிஷாவிடம், தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய், வீரதீரச் செயலுக்கான மத்திய அரசின் ‘சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா’ விருதிற்கான பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கிச் சிறப்பித்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/gallantry-award-announced-by-union-government-chief-minister-vijay-presents




