சென்னை, வடசென்னை பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்து, மீன் வளம் மற்றும் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- மீன்கள் செத்து மிதப்பு வடசென்னை பகுதியில் கவுதம் அதானி குழுமத்தின் கட்டுப்பள்ளி துறை உள்ளிட்ட சிறப்பு பொருளாதார மண்டலம் உட்பட ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் 50 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் சிவப்பு பட்டியலில் இருந்து வரும் அபாயகரமான தொழிற்சாலைகளாகும். இந்த வகைத் தொழிற்சாலைகளில் முன்னெச்சரிக்கை தடுப்பு மற்றும் உடனடி மீட்புக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தொழிற்சாலை ஆய்வுத்துறை காலமுறைப்படி ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை தருகிறதா? என்ற ஆழ்ந்த சந்தேகம் எழுகிறது. அண்மையில் திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் அனல் மின் நிலையத்தின் விரிவாக்க கட்டுமானப் பணியில் புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது, கான்கிரீட் வளைவு சாரம் சரிந்து வீழ்ந்ததில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து கன்னிகைப்பேர் கிராமத்தில் இயங்கி வரும் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை அமோனியா விஷவாயு கசிவு காரணமாக புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் 13 பேர் உயிரிழந்தனர். தற்போது கொசஸ்தலை ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதக்கும் நிகழ்வு பேரதிர்ச்சி அளிக்கும் சம்பவமாகும். மீன்களின் சாவுக்கு காரணம் என்ன? இதனை செயற்கை பேரிடர் நிகழ்வாகவே கருத வேண்டும். இதன் காரணமாக நெட்டு குப்பம், தாழங்குப்பம், முகத்துவாரக் குப்பம், எண்ணூர் குப்பம், சிவன்டை குப்பம் உட்பட 40க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்களில் வாழ்ந்து வரும் ஆயிரக்கணக்கான மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வரும் போதும், சிலவகை மீன்கள் மிதக்காமல், தரைத்தளப் பகுதிக்கு சென்று கிடக்கும் என கூறப்படுகிறது. இதனால், இப்பகுதியில் வீசும் துர்நாற்றத்தால் காற்று கடுமையாக மாசு பட்டிருப்பதைக் காட்டுகிறது. செத்து மிதந்த மீன்களும், நீரில் மூழ்கி தரைத்தளதில் விழுந்து கிடக்கும் மீன்களும் சாப்பிடவும், கருவாடாக பதப்படுத்தவும் பயன்படுத்தக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. டன் கணக்கான மீன்களின் சாவுக்கு காரணம் என்ன என்பதை பற்றி நடைபெறும் ஆய்வு மற்றும் விசாரணை அறிக்கை விபரம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். தொழிற்சாலை ஆய்வு காலமுறைப்படி மேற்கொள்ளப்பட்டு, அதன் விபரத்தை பொதுமக்களுக்கு மாதம்தோறும் தெரிவிக்க வேண்டும். இந்த செயற்கை பேரிடர் சம்பவத்துக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டு, சட்டத்தில் இருந்து தப்பி விடாமல் தண்டனை பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/fishery-resources-and-the-livelihoods-of-fishermen-in-north-chennai-must-be-protected-m-veerapandian



