கோத்தகிரி, கோத்தகிரி கடைவீதி பகுதியில் கரடி நடமாட்டம் அதிகரித்து வருவதால், கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரடி நடமாட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் வன விலங்குகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விடுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக பஸ் நிலையத்தில் இருந்து கடைவீதி செல்லும் சாலையில் போலீஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி, பள்ளிவாசல் மற்றும் நெருக்கமான குடியிருப்புக்கள் உள்ள பகுதிகளில் இரவு 8 மணி முதல் கரடிகள் தொடர்ந்து நடமாடி வருகின்றன. கடந்த 2 மாதங்களுக்கு முன் அரசு மருத்துவமனை சாலையில் இரவு நேரத்தில் தனது தாயாருடன் சென்ற சிறுமியை கரடி துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல கடந்த வாரம் அங்குள்ள பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்றவர்களையும், பொதுமக்களையும் கரடி துரத்தியது. மேலும் கடைவீதி மாரியம்மன் கோவில் முன்புறம் கரடி உலா வந்தது. பொதுமக்கள் அச்சம் இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7.45 மணிக்கு மாரியம்மன் கோவில் அருகே உள்ள நடைபாதை மற்றும் குடியிருப்பு பகுதியில் கரடி ஒன்று உலா வந்தது. இதைக்கண்டு அவ்வழியாக நடந்து சென்றவர்கள் அச்சமடைந்தனர். இந்த நிலையில் கோத்தகிரி ஆரோக்கிய மாதா ஆலய நுழைவு வாயில் சாலையில் கரடி அமர்ந்து இருந்தது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கோத்தகிரி கடைவீதி பகுதிகளில் இரவு நேரங்களில் கரடி நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தனியாக வெளியே செல்ல மிகவும் அச்சமாக உள்ளது. எனவே வனத்துறையினர் கரடியின் நடமாட்டத்தை கண்காணித்து, அதை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/bear-activity-increases-on-kotagiri-shopping-street-public-demands-to-trap-them-in-cages




