சென்னை, டெங்கு காய்ச்சல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் அண்மைக்காலங்களில் இல்லாத வகையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாலும், இதுவரை 9 பேர் உயிரிழந்திருப்பதாலும் மக்களிடம் பெரும் அச்சமும், கவலையும் ஏற்பட்டிருக்கிறது. டெங்கு காய்ச்சலுக்கான மருத்துவம் அளிப்பது ஒருபுறம் இருக்க, டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன? டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் என்ன? அவை தென்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது தான் இன்றைய முதன்மைத் தேவை ஆகும். உயிரிழப்புகள் தமிழ்நாட்டில் நடப்பாண்டில் இதுவரை 16,830 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பது சோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையே இவ்வளவு என்றால் குறைந்தபட்சம் இதை விட 10 மடங்கு பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு, அது குறித்த புரிதலும், விழிப்புணர்வும் இல்லாமல் சாதாரண காய்ச்சலுக்கான மருத்துவத்தை பெற்றுக் கொண்டிருக்கக் கூடும். மருத்துவ ஆய்வுகளை மேற்கொண்டு டெங்கு காய்ச்சலுக்கான மருத்துவத்தை பெறாததால் தான் உயிரிழப்புகள் அதிகரித்திருக்கின்றன. விழிப்புணர்வு அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் மட்டும் மூவர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களில் கடைசியாக இறந்த மாணவரின் உயிரிழப்புக்கு காரணம் டெங்கு அல்ல. விஷக்காய்ச்சல் என்று அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. உண்மையில் அந்த மாணவரின் உயிரிழப்புக்கு காரணம் அலட்சியமும், விழிப்புணர்வு இல்லாமையும் தான். மாணவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு 2 அல்லது 3 நாள்களில் குணமடையாத நிலையில், மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தால் காய்ச்சலின் தன்மையைக் கண்டறிந்து மருத்துவம் அளித்திருக்க முடியும். அதை செய்யுமாறு அவருக்கு மருத்துவ ஆலோசனை வழங்கத் தவறியது தான் உயிரிழப்புக்கு காரணம் ஆகும். டெங்கு காய்ச்சல் குணப்படுத்த முடியாத நோய் அல்ல. அதற்கான சிகிச்சை வசதிகளும், மருந்துகளும் அரசு மருத்துவமனைகளில் போதிய அளவில் உள்ளன. டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, அவர்களின் ஒத்துழைப்புடன் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தினால் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க முடியும். பொதுமக்களும், அரசு அமைப்புகளும் இணைந்து நீர் தேங்குவதற்கான வாய்ப்புகளை சரி செய்ய வேண்டும். பயன்படுத்தப்படாமல் கிடக்கும் கொள்கலன்கள், வாகனங்களின் டயர்கள், சிரட்டைகள், பூந்தொட்டிகள், வாளிகள் உள்ளிட்டவற்றை அகற்ற உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதை ஒரு சிறப்பு இயக்கமாக நடத்த வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதியில் தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள அனைத்துப் பொருட்களையும் அகற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். அதன் மூலம் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும். அரசு நடவடிக்கை டெங்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகள், அதற்காக மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் குறித்து தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். டெங்கு காய்ச்சல் தாக்குவதைத் தடுக்க மக்களும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். நில வேம்பு கசாயம் குடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும். அதேபோல், ரத்த அணுக்கள் குறையும் போது பப்பாளி சாறு அருந்தினால் அடுத்த இரு நாட்களில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். இத்தகவல்களை முதன்மை ஊடகங்கள் வாயிலாகவும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் மக்களிடம் கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/people-should-be-made-aware-of-dengue-fever-anbumani




