தூத்துக்குடி, தூத்துக்குடியில் இருந்து வெளிநாடுகளுக்கு கப்பல்கள் மூலம் கருவாடு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரம் முத்துநகரான தூத்துக்குடியில் துறைமுகம், விமான நிலையம், ரெயில் நிலையம், பஸ் நிலையம் என்று அனைத்து போக்குவரத்து வசதிகளும் உள்ளன. இதனால் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் தொழில் நகரமாக தூத்துக்குடி முத்திரை பதித்து வருகின்றது. குறிப்பாக மீன்பிடி தொழில் சிறப்புடன் விளங்குகிறது. மேலும் ஆண்டில் பெரும்பாலான மாதங்களில் வெயில் சுட்டெரிப்பதால் கருவாடு உற்பத்தியும் முழுவீச்சில் நடைபெறுகிறது. வெளிநாடுகளுக்கு கருவாடு ஏற்றுமதி தூத்துக்குடியில் மீன்பிடி தடைகாலத்துக்கு பிறகு விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதால், அதிகளவில் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. அதன் பின்னர் அந்த மீன்களை பதப்படுத்தியும், கருவாடாக மாற்றியும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். வேலைவாய்ப்பு தூத்துக்குடியில் கருவாடு உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து மீனவர்கள் கூறுகையில், "பொதுவாக நெத்திலி, சாளை, சீலா, பாறை போன்ற மீன்கள் மூலம் கருவாடு உற்பத்தி செய்கிறோம். நல்ல மீன்களை தேர்வு செய்து, அவற்றில் உள்ள குடல் மற்றும் தேவையற்ற பகுதிகளை நீக்குவோம். அதன் பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து சில மணி நேரம் முதல் ஒரு நாள் வரையிலும் ஊற வைப்போம். உப்பானது மீன்களை பாதுகாப்பதுடன் சுவையூட்டுகின்றன. உப்பு ஊறிய மீன்கள் சுத்தமான உலர்த்தும் தளங்களில் பரப்பி, பல நாட்கள் நன்கு வெயிலில் உலர்த்துவோம். போதுமான அளவு ஈரப்பதம் நீங்கிய பிறகு கருவாட்டின் தரத்தை பரிசோதித்து விற்பனைக்கு அனுப்புகிறோம். இதன் மூலம் ஆயிரக்கணக்கான மீனவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது” என்றனர். வெளிநாட்டினரின் விருப்பம் தற்போது மீன்களை ரகம் வாரியாக தரம் பிரித்து, சுத்தம் செய்து, உப்பு கலந்து வெயிலில் காய வைக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். வெயில் கொளுத்துவதால் மணமணக்கும் நம்ம ஊரு கருவாடு உற்பத்தி சூடுபிடித்துள்ளது. இங்கு தயாரிக்கப்படும் கருவாடு அதிகளவில் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுதவிர ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, துபாய், கத்தார், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கும் அதிகளவில் ஏற்றுமதியாகிறது. மருத்துவ குணம் கொண்ட கருவாடுகளுக்கு அதிக கிராக்கி உள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் ஆர்வமுடன் கருவாடுகளை கொள்முதல் செய்கின்றனர். வெளிநாட்டினரும் நம்ம ஊரு கருவாடுகளை அதிகம் விரும்புகின்றனர். வியாபாரிகளும் போட்டி போட்டு வாங்கி செல்வதால் மீனவர்களுக்கு நல்ல விலை கிடைக்கிறது. தேவை அதிகம் இதுகுறித்து தூத்துக்குடியை சேர்ந்த கருவாடு ஏற்றுமதியாளர் ஜோசப் காஸ்கரினோ கூறியதாவது: தூத்துக்குடியில் கருவாடு உற்பத்தி முக்கிய இடம் பிடித்துள்ளது. பெரும்பாலும் மாசிக்கருவாடு, நெத்திலி கருவாடு ஏற்றுமதி அதிகளவில் உள்ளது. இந்த கருவாட்டை வெளிநாட்டில் மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். அங்கு தேவை அதிகமாக இருக்கும்போது, நாம் உற்பத்தியை பெருக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. தற்போது மீன்பிடி தடைகாலம் முடிந்து விசைப்படகுகள் மீண்டும் கடலுக்கு சென்று வருகின்றன. ஆனால் தூத்துக்குடியில் மீன்களுக்கு அதிக தேவை உள்ளது. இதனால் மக்கள் அதிக விலை கொடுத்து மீன்களை வாங்கி சாப்பிடுகின்றனர். இதேபோன்று கேரள வியாபாரிகள் பெரிய மீன்களை மொத்தமாக வாங்கி ஏற்றுமதி செய்து விடுகின்றனர். இதனால் கருவாடு உற்பத்திக்கு தேவையான மீன்கள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. அதிக விலை கொடுத்து மீன்களை வாங்கி கருவாடு தயாரிக்கும்போது, கருவாட்டின் விலையும் அதிகரித்து விடும். இது வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். ரூ.150 முதல் ரூ.230 வரை விற்பனையான ஒரு கிலோ நெத்திலி கருவாடு, தற்போது ரூ.410-க்கு விற்பனையாகிறது. இதேபோன்று மாசிக்கருவாடு கிலோ ரூ.450 முதல் ரூ.550 வரை விற்பனையாகி வருகிறது. மாதத்துக்கு 4 முதல் 5 கன்டெய்னர் கருவாடு ஏற்றுமதியாகும். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-karuvadu-to-be-exported-abroad




