சென்னை, 'மருத்துவமனைகளில் ஆதார் எண் அளித்து, ஆபா ஐ.டி., உருவாக்குவதன் வாயிலாக, நாட்டின் எந்த பகுதியில் இருந்தும், முந்தைய சிகிச்சைகளை பார்த்து, தொடர் சிகிச்சை பெற முடியும்' என, அரசு மருத்துவமனை முதல்வர்கள் தெரிவித்தனர். 'ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன்' திட்டத்தின்கீழ், ஹெச்.எம்.ஐ.எஸ்., என்ற சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த தகவல் அமைப்பில், அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளிடம், அவர்களின் ஆதார் எண் பெற்று, அதன் வாயிலாக, 'ஆபா ஐ.டி.,' உருவாக்கப்படுகிறது. இந்த ஐ.டி., உருவாக்குவோரின் சிகிச்சை விவரங்களை, ஹெச்.எம்.ஐ.எஸ்., தகவல் அமைப்பில் சேகரித்து வைக்க முடியும். அதேபோல், தனியார் மருத்துவமனைகள், தனித் தனி தகவல் அமைப்பை பயன்படுத்தினாலும், மத்திய அரசின் தகவல் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆபா ஐ.டி. இத்தகவல் அமைப்பில் நோயாளிகளின் விவரங்களை சரியாக சேகரிக்காத, 203 மருத்துவமனைகளின் பட்டியலை, தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில், தமிழகத்தை சேர்ந்த 26 மருத்துவமனைகள் உள்ளன. அனைத்து மருத்துவமனைகளிலும், 'மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு, ஆபா ஐ.டி., உருவாக்கி, அவர்களின் சிகிச்சை விவரங்களை சேகரிக்க வேண்டும்' என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதற்கு ஆதார் எண் கட்டாயம் என்பதால், அரசு மருத்துவமனைகளில், நோயாளிகளிடம் ஆதார் எண் பெறுவது சிரமமாக உள்ளது என, மருத்துவமனை முதல்வர்கள் தெரிவித்தனர். 'விழிப்புணர்வு அவசியம்' இது குறித்து, அரசு மருத்துவமனை முதல்வர்கள் கூறியதாவது: தனியார் மருத்துவமனைகளில், ஒரு நோயாளி செல்லும்போது, அங்கு ஆதார் எண் கேட்டால், ஆட்சேபனை தெரிவிக்காமல் கொடுக்கின்றனர். அதேநேரம், அரசு மருத்துவமனைகளில் மத்திய அரசின் அறிவுறுத்தல் படி, ஆபா ஐ.டி., உருவாக்க, ஆதார் எண் கேட்டால், அவற்றை வேறு மாதிரியாக சித்தரிக்கின்றனர். குறிப்பாக, ஆதார் இருந்தால்தான், அரசு மருத்துவமனையில் சிகிச்சையா என, கேட்கின்றனர். ஆபா ஐ.டி., என்பது, நோயாளிகளுக்கு வாழ்நாள் முழுவதும்பயனளிக்க கூடியது. இதை உருவாக்குவோர், நாடு முழுவதும் எந்தவொரு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு சென்றாலும், அங்கு தங்கள் மொபைல் எண்ணை அளிப்பதன் வாயிலாக, அவர்களின் முந்தைய மருத்துவ சிகிச்சையை, அங்குள்ள டாக்டர் தெரிந்து கொள்ள முடியும். இது குறித்து, மருத்துவமனைக்கு வரும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, மாநில அரசும் அறிவுறுத்தி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/aadhaar-registration-in-hospitals-will-help-in-lifelong-treatment




