புதுடெல்லி, காவிரி நதிநீரை கர்நாடகம், தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய 4 மாநிலங்களும் பிரச்சினை இன்றி பகிர்ந்து கொள்வதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு கடந்த 2018-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. அப்போதிலிருந்து தற்போது வரை இந்த இரு அமைப்புகளும் அவ்வப்போது கூடி நதிநீர் பிரச்சினைகளை தீர்த்து வருகின்றன. இந்த வகையில் மேலாண்மை ஆணையம் 52 முறை கூட்டப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 54-வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்க 4 மாநிலங்களின் அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் 4 மாநில அதிகாரிகளும் கலந்துகொண்டனர். காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கியது. அப்போது கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பது குறித்து தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகள் காவிரி மேலாண்மை ஆணையத்திடம் வலியுறுத்தினர். தொடர்ந்து, தண்ணீர் இருப்பு மற்றும் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறித்து கர்நாடக அதிகாரிகள் ஆணையத்திடம் தெரிவித்தனர். இதனையடுத்து, தமிழகத்துக்கு காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்று வாரியத்தின் பரிந்துரைப்படி, வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் திறந்து விட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு 9 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டால், தமிழகத்துக்கு 11.66 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/karnataka-ordered-to-release-9000-cusecs-of-water-to-tamil-nadu




