சென்னை, தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் சட்டவிரோத விற்பனை தொடர்பான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு எடுத்து வரும் பல்வேறு தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு காவல்துறையால் 03.07.2026 முதல் 05.07.2026 வரை மூன்று நாட்கள் மாநில அளவிலான சிறப்பு அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் சட்டவிரோத கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையைத் தடுக்க, மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் மாவட்ட மற்றும் மாநகர காவல்துறையின் தீவிர வாகனச் சோதனைகள், பல்வேறு இடங்களில் அதிரடிச் சோதனைகள், கண்காணிப்பு மற்றும் நுண்ணறிவுத் தகவல் சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொண்டனர். 621 குற்றவாளிகள் கைது மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த ஒருங்கிணைந்த அமலாக்க நடவடிக்கைகளின் போது, மொத்தம் 617 NDPS (போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள்) வழக்குகள் கண்டறியப்பட்டு 296 கிலோ கஞ்சா, 1.3 கிலோ பிற போதைப்பொருட்கள் மற்றும் 802 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு 621 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக 650 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6,653 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேற்கூறிய அனைத்து வழக்குகளும், போதைப்பொருள் மற்றும் மனமயக்கப் பொருட்கள் தடுப்புச் சட்டம், 1985 (NDPS) மற்றும் சிகரெட்டுகள் & பிற புகையிலைப் பொருட்கள் (விளம்பரத் தடை மற்றும் வர்த்தகம், வணிகம், உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகம் ஒழுங்குமுறை) சட்டம், 2003 (COTPA) மற்றும் பிற தொடர்புடைய சட்ட பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. புகார்களை தெரிவிக்கலாம் தொடர்ச்சியான நுண்ணறிவுத் தகவல் சார்ந்த அமலாக்க நடவடிக்கைகள் மற்றும் கூட்டு முயற்சிகள் மூலம், போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் அச்சுறுத்தலை ஒழிப்பதில் தமிழ்நாடு காவல்துறை தனது உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் சட்டவிரோத, கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனை தொடர்பான தகவல்களை "Drug Free TN" (போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு) கைபேசி செயலி, கட்டணமில்லா உதவி எண்: 10581 அல்லது WhatsApp எண்: 94984 10581 ஆகியவற்றின் மூலம் தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/296-kg-of-ganja-seized-across-tamil-nadu-in-the-last-three-days-621-people-arrested



