நூற்றாண்டுகள் கடந்து நிற்கும் ரஞ்சன்குடி கோட்டைக்கு ஒரு சின்ன ஸ்பாட் விசிட், எப்படி போகலாம்? எங்கிருந்து போகலாம்?சின்ன டிராவல் டிப்ஸ். நீண்ட நாட்களுக்குப் பிறகு மிலாது நபி விடுமுறையை முன்னிட்டு நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்தது. அதனால் வீட்டுக்கு வந்திருந்தேன். அப்போது நண்பன் ஒருவன் வா நண்பா எங்கயாச்சும் வெளியே போலாம் வாடா என கூப்பிட்டான். நானும் சரி என்று சொல்லிவிட்டு, பெருசாக எந்தத் திட்டமும் இல்லாமல் அடுத்த ஐந்து நிமிஷத்தில் கிளம்பிட்டேன். எங்கே போகலாம் என்று யோசித்தபோது, பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கும் ரஞ்சன்குடி கோட்டைக்குப் போகலாம் என்று முடிவு செய்தோம். அப்படியே நண்பனுடன் கிளம்பி ரஞ்சன்குடி கோட்டையைச் சென்றடைந்தோம். சாலையிலிருந்தே கோட்டை கண்ணுக்குத் தெரிந்தது. தூரத்தில் இருந்தே உயரமாகத் தெரிந்த அந்தக் கற்சுவர்களைப் பார்த்ததும் பல வருஷமா இருந்தும் இன்னும் இவ்வளவு கம்பீரமா, இன்னும் அப்படியே இருக்கே என்று தோன்றியது. கோட்டைக்குள் போகும் முன்பே, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு என்ன மாதிரியான வாழ்க்கை இருந்திருக்கும், என்னென்ன சம்பவங்கள் நடந்திருக்குமோ என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். பெரம்பலூர் நகரத்திலிருந்து வடக்கே திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் இந்தக் கோட்டை அமைந்திருக்கிறது. 17 ஆம் நூற்றாண்டில் கர்நாடக நவாப்பால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் கோட்டை, வரலாற்றிலும் முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறது. குறிப்பாக 1751-ல் நடந்த வாலிகொண்டா போர் இந்தக் கோட்டையின் வரலாற்றில் முக்கியமான சம்பவமாகும். அந்தப் போரில் முகமது அலி தரப்புக்கு ஆங்கிலேயர்களும், சந்தா சாகிப் தரப்புக்கு பிரெஞ்சுக்காரர்களும் ஆதரவாக இருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. வாலிகண்டபுரம் என்ற அருகிலுள்ள கிராமத்தின் பெயரால் போர் அழைக்கப்பட்டாலும், போரின் முக்கிய பகுதியாக ரஞ்சன்குடி கோட்டையே இருந்திருக்கிறது. உள்ளே போனதும் மாறிய எண்ணம் கோட்டையின் நுழைவுப் பகுதிக்குச் சென்றபோது, சில இடங்களில் குப்பைகள் கிடந்ததைப் பார்த்தேன்.இது மாதிரி ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடத்தின் நுழைவுப் பகுதி இன்னும் சுத்தமாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைத்தேன். இதுபற்றி அங்கிருந்தவர்களிடம் கேட்டபோது, தினமும் சுத்தம் செய்வதாகவும், குப்பைகள் இருந்தால் அவற்றை அகற்றிவிடுவதாகவும் சொன்னார்கள்.அதனால் இதை நிர்வாகத்தின் குறை என்று மட்டும் சொல்லிவிட முடியாது. நாமும் சுற்றுலா செல்லும்போது குப்பைகளை கண்ட இடத்தில் போடாமல் இருந்தாலே பாதி பிரச்னை தீர்ந்துவிடும். அதைத் தாண்டி கோட்டைக்குள் சென்றதும், வெளியே இருந்த அந்த எண்ணமே மாறிவிட்டது. உயரமாக இருக்கும் கற்சுவர்கள், பழைய கட்டுமானங்கள், கோட்டையின் பல பகுதிகளுக்குச் செல்லும் வளைந்து நெளிந்த பாதைகள் என ஒவ்வொன்றையும் பார்த்துக்கொண்டே நடந்தோம்.சில இடங்களில் நின்று அந்தக் கற்சுவர்களைப் பார்த்தபோது, இந்த இடத்துல முன்னாடி எவ்வளவு பேர் நடந்திருப்பாங்க,எவ்வளவு விஷயங்கள் நடந்திருக்குமோ என்று நினைக்காமல் இருக்க எங்களால் முடியவில்லை. மக்கள் வருகிறார்கள். ஆனால் வசதிகள் வரவில்லை நாங்கள் சென்றிருந்த நேரத்தில் சுமார் 100 முதல் 130 பேர் வரை கோட்டையைப் பார்வையிட வந்திருந்தார்கள். குடும்பமாக வந்தவர்கள், நண்பர்களுடன் வந்தவர்கள் என பலரும் இருந்தனர். குழந்தைகளும் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். நாங்களும் கோட்டையைச் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தோம். ஆனால் அப்போது ஒரு விஷயம் தெளிவாகத் எங்களுக்கு தோன்றியது. இவ்வளவு பேர் வந்து செல்லும் இடத்தில் சில அடிப்படை வசதிகள் குறைவாகவே இருக்கின்றன. முக்கியமாக கழிப்பறை வசதியும், குடிநீர் வசதியும் இல்லை. கோட்டைக்குள் இருக்கும் ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. ஆனால் அந்த வரலாற்றைப் பற்றி தெரிந்துகொள்ளும் அளவுக்கு தகவல் பலகைகள் இல்லை.இந்த இடம் எதற்காக பயன்படுத்தப்பட்டது?, இந்தக் கட்டடம் எப்போது கட்டப்பட்டது?,இங்கே என்ன நடந்தது?” போன்ற கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்ள வழிகாட்டி அல்லது விரிவான தகவல் பலகைகள் இருந்தால் நன்றாக இருக்கும். அப்படி இருந்தால், சுற்றுலாப் பயணிகள் கோட்டையை வெறுமனே சுற்றிப் பார்த்துவிட்டு போகாமல், அதன் வரலாற்றையும் புரிந்துகொண்டு செல்வார்கள். CCTV இருந்தால் இன்னும் நல்லது அங்கிருந்த சிலரிடம் பேசியபோது, கோட்டையில் CCTV கண்காணிப்பு வசதி இல்லை என்று தெரிவித்தார்கள். இது ஒரு வரலாற்றுச் சின்னம் என்பதால், கட்டடத்தின் பாதுகாப்புக்கும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கும் CCTV போன்ற கண்காணிப்பு வசதி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். சாப்பாடு. தண்ணீர். கொஞ்சம் பார்த்துக்கோங்க கோட்டையைச் சுற்றியுள்ள பகுதியில் பெரிய உணவகங்கள் என எதுவும் இல்லை. சிறிய கடைகளில் ஸ்நாக்ஸ், குளிர்பானங்கள் போன்றவை இங்கு கிடைக்கின்றன. குடும்பத்துடனும் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வருபவர்கள் நீண்ட நேரம் இங்கே இருக்கப் போகிறீர்கள் என்றால், தேவையான குடிநீர் மற்றும் உணவை முன்கூட்டியே எடுத்துக்கொண்டு வருவது நல்லது. கோட்டைக்குள் ஒரு சுவாரஸ்யமான விஷயம் ரஞ்சன்குடி கோட்டையில் என்னுடைய கவனத்தை ஈர்த்த மற்றொரு விஷயம் அங்கிருந்த மத அடையாளங்கள். கோட்டை வளாகத்தில் இந்து மதம் தொடர்பான சில கடவுள் சிலைகளையும் பார்க்க முடிகிறது. அதேபோல் அங்கே ஒரு பள்ளிவாசலும் இருக்கிறது. அதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அந்தப் பள்ளிவாசல் இன்றும் பயன்பாட்டில் இருப்பதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தார்கள். ஒருபக்கம் பல நூறு ஆண்டுகளைக் கடந்து நிற்கும் கோட்டை,மற்றொரு பக்கம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் வழிபாடு. கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் ஒரே இடத்தில் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. கோட்டையை முழுவதுமாகச் சுற்றிப் பார்த்துவிட்டு நாங்கள் வீட்டுக்குக் கிளம்பினோம். வீட்டுக்கு வந்த பிறகுதான் மழை பெய்ய ஆரம்பித்தது. அப்போதுதான் எனக்கு ஒரு விஷயம் தோன்றியது. நாங்க கோட்டையில் இருந்தபோதே இந்த மழை வந்திருந்தா எங்கே போய் நின்றிருப்போம் என கோட்டைக்குள் சுற்றிப் பார்க்கும் போது வெயிலாக இருந்தாலும், திடீரென மழை வந்தாலும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக நிற்பதற்கு ஒரு சிறிய கூடாரம் அல்லது நிழற்குடை போன்ற வசதி இருந்தால் நன்றாக இருக்கும். குறிப்பாக குழந்தைகள் மற்றும் வயதானவர்களுடன் வருபவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். இதையும் மாவட்ட நிர்வாகம் கவனத்தில் எடுத்துக்கொண்டால் நன்றாக இருக்கும். வசதிகளை மேம்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த வரலாற்றுச் சின்னத்தில் கழிப்பறை, குடிநீர், CCTV, தகவல் பலகைகள், வழிகாட்டும் வசதி மற்றும் வெயில், மழையிலிருந்து பாதுகாப்பதற்கான இடம் போன்ற சில அடிப்படை வசதிகளை மேம்படுத்தினால் இன்னும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடியும்.மற்றபடி, வெயிலும் மழையும் இல்லாமல் நல்ல காலநிலையில் சென்றால், ரஞ்சன்குடி கோட்டை உண்மையிலேயே ஒரு நல்ல ஸ்பாட்தான். எப்படி போகலாம்? பேருந்தில் செல்ல விரும்புபவர்கள் பெரம்பலூரிலிருந்து வி.களத்தூர் டூ பசும்பலூர் செல்லும் 2A, 14A (இதில் பெண்களுக்கு இலவசம்) பேருந்துகளில் செல்லலாம்.கோட்டையை சுற்றிப்பார்க்க கட்டணம் ஏதும் இல்லை, அனைவருக்கும் அனுமதி இலவசம் தான். தனி வாகனங்களில் செல்பவர்கள் பெரம்பலூரிலிருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல வேண்டும். வாலிகண்டபுரத்தைத் தாண்டியதும், சாலையிலிருந்தே கோட்டைக்குச் செல்லும் வழி தெரியும். கோட்டையைச் சுற்றிப் பார்த்துவிட்டு நண்பனுடன் கடலைப்பருப்பு சாப்பிட்டுக்கொண்டே வீட்டுக்குத் திரும்பினோம். ரஞ்சன்குடி கோட்டையில் இருந்து கிளம்பும்போது மனதில் இருந்தது ஒரே விஷயம்தான். பல நூறு ஆண்டுகளைக் கடந்தும் போர்களையும், ஆட்சி மாற்றங்களையும், காலத்தின் மாற்றங்களையும் அமைதியாகச் சுமந்துகொண்டு இன்னும் கம்பீரமாக நிற்கிறது இந்த ரஞ்சன்குடி கோட்டை. வரலாறு இங்கே கம்பீரமாக இருக்கிறது.அந்த வரலாற்றைப் பார்க்க வரும் மக்களுக்கான வசதிகளும் கொஞ்சம் கம்பீரமாக இருந்தால். இன்னும் சிறப்பாக இருக்கும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/lifestyle/travel/history-stands-tall-here-but-what-about-facilities-perambalur-ranjankudi-fort-travel-diary



