சென்னை, தமிழகத்தில் த.வெ.க. தலைமையில் நடைபெறும் கூட்டணி ஆட்சிக்கு மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகின்றன. இந்த நிலையில், மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அக்டோபர் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் மாநில செயற்குழு கூட்டம் நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி உள்ளிட்ட மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதன்பின்னர் பெ.சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தமிழ்நாட்டில் சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவித்ததன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை அறிவித்து உள்ளது. அந்த வகையில், இந்த இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு பிறகு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை நாளை (அதாவது இன்று) மதியம் தெரிவிப்போம். அதாவது, நாளை (இன்று) மதியம் 2 மணிக்கு திருச்சியில் நடைபெற உள்ள எங்கள் கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில் இது குறித்து விவாதிக்க உள்ளோம். இந்த கூட்டம் முடிந்த பிறகு இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்த எங்களின் இறுதி நிலைப்பாட்டை தெரிவிப்போம். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தபோதே இது ஒரு ஆரோக்கியமற்ற அரசியல். சந்தர்ப்பவாத நிலை என்பதை நாங்கள் ஏற்கனவே தெளிவாக விமர்சித்திருக்கிறோம். அந்த விமர்சனத் தில் எந்தவிதமான மாறுபாடும் கிடையாது. ஆளும் த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பீர்களா? கூட்டணியில் சேர்வீர்களா? என்று கேட்கிறீர்கள். இடைத்தேர்தல் தொடர்பான அனைத்து அம்சங்களும் மாநில குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும். இடைத்தேர்தலை புறக்கணிப்பது அல்லது வேறு ஏதேனும் முடிவுகள் எடுப்பது குறித்து அந்த கூட்டத்திற்கு பிறகு எங்களுடைய இறுதியான மற்றும் உறுதியான முடிவை நாங்கள் முறைப்படி அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/whom-to-support-in-the-by-election-cpim-to-decide-today




