வடமதுரை, வடமதுரை அருகே விவசாயியிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே காணப்பாடி புதுப்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 58). இவர் தனது தோட்டத்தில் புதிதாக அமைத்த ஆழ்துளை கிணற்றுக்கு மின் இணைப்பு பெறுவதற்காக புல வரைபடம் நகல் கேட்டு காணப்பாடி கிராம நிர்வாக அலுவலர் பாண்டியராஜனிடம் (வயது 40) விண்ணப்பித்தார். பழைய ஆழ்துளை கிணற்றையும் வரைபடத்தில் சேர்த்து தருமாறு கேட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து கோவிந்தராஜின் தோட்டத்திற்கு நேரில் சென்று பாண்டியராஜன் ஆய்வு செய்தார். ரூ.2 ஆயிரம் லஞ்சம் அதன் பின்னர் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக உதவியாளர் ராமலிங்கம் (70) என்பவர் கோவிந்தராஜை அணுகினார். அவர் பழைய ஆழ்துளை கிணற்றையும் சேர்த்து வரைபட சான்றிதழ் தர வேண்டுமென்றால் ரூ.2 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்பு கோவிந்தராஜை செல்போனில் தொடர்பு கொண்ட ராமலிங்கம், சான்றிதழ் தயாராகிவிட்டது. பணத்துடன் அலுவலகத்திற்கு வாருங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கோவிந்தராஜ், இது குறித்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கோவிந்தராஜிடம் கொடுத்து அனுப்பினர். கைது நேற்று முன்தினம் அந்த ரூபாய் நோட்டுகளுடன் கோவிந்தராஜ், கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் பாண்டியராஜன் வெளியே சென்றிருந்ததால், அலுவலகத்தில் இருந்த ராமலிங்கத்திடம் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன் தலைமையிலான போலீசார் ராமலிங்கத்தை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் பாண்டியராஜனிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அதன்பின்னர் வழக்குப்பதிவு செய்து பாண்டியராஜன், ராமலிங்கம் ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/village-administrative-officer-arrested-for-taking-rs-2000-bribe-from-farmer



