கன்னியாகுமரி, கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள ஈத்தங்காட்டை சேர்ந்தவர் சபரிவர்மன் (வயது 33). மாற்றுத்திறனாளி வியாபாரியான இவர் தனது வீட்டின் அருகே பெட்டிக்கடை நடத்தி வந்தார். அவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்ததாக கூறி, தென்தாமரைக்குளம் போலீசார் கடந்த 9-ந்தேதி சபரிவர்மனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அங்கு விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்த அவர், கடந்த 13-ந்தேதி சிறையில் வைத்தே அடித்துக் கொல்லப்பட்டார். அவரை சிறை வார்டன்கள் 3 பேர் மற்றும் 8 விசாரணை கைதிகள் சேர்ந்து கை கால்களை கட்டிப்போட்டு கொடூரமான முறையில் அடித்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து நேசமணிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகர்கோவில் சிறையின் வார்டன், தலைமை வார்டன், சிறைக் காவலர் மற்றும் 8 கைதிகள் என மொத்தம் 11 பேரை கைது செய்தனர். காவலர்கள் பணியிடை நீக்கம் கைது செய்யப்பட்ட சிறை காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, நாங்குநேரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். நாகர்கோவில் சிறையில் இருந்த 8 கைதிகளிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அந்த 8 கைதிகளும், பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். இந்த நிலையில் சபரிவர்மன் கொலையில் கைது செய்யப்பட்டிருக்கும் கைதிகளில் அரவிந்த், அஜய் மற்றும் ஜெகன் ஆகிய 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக போலீசார் தரப்பில் நாகர்கோவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதே நேரத்தில் சபரிவர்மன் கொலை நடந்த நாகர்கோவில் சிறையில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் சபரிநாதன் கொலை நடந்த அறையில் இருந்து தடயங்கள் மற்றும் ரேகைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். செல்போன் மாயம் இதற்கிடையே சபரிவர்மனின் செல்போன் மாயமாகியிருக்கும் விவரம் வெளியானது. அந்த செல்போனில் சில முக்கிய வீடியோ ஆதாரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவரது செல்போன் யாரிடம் உள்ளது? என்பது தெரியாத நிலையில், அதை தேடி கண்டுபிடிக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டனர். சி.பி.சி.ஐ.டி. விசாரணை இந்த நிலையில் சபரிவர்மன் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து சபரிவர்மன் கொலை வழக்கு விசாரணை உடனடியாக கன்னியாகுமரி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. சபரிவர்மன் கொலை வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம், நேசமணி நகர் போலீசார் ஒப்படைத்தனர். விசாரணை தொடக்கம் இந்தநிலையில் அதனை பெற்றுக்கொண்ட சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை நேற்று தொடங்கியது. துணை போலீஸ் சூப்பிரண்டு நவராஜ் ராஜ்குமார் தலைமையில் நெல்லை இன்ஸ்பெக்டர்கள் மரிய பிரான்சிகா, உலகராணி மற்றும் போலீசார் குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்த ஆயத்தமானார்கள். அதன்படி கொலை சம்பவம் நடந்த நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறைக்கு சென்று விசாரித்தனர். சபரிவர்மன் அடைக்கப்பட்டிருந்த அறையை பார்வையிட்ட அவர்கள், அங்கு சில தகவல்களை கேட்டறிந்தனர். சிறைச்சாலையில் விசாரணை மற்றும் சம்பவம் நடைபெற்ற சிறை அறையில் கேமரா மூலமும் பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து சபரிவர்மனின் மனைவி ஆனந்தவல்லி மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வியாபாரி கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கையிலெடுத்ததால், மீண்டும் இந்த வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/murder-case-of-undertrial-prisoner-sabarivarman-cb-cid-police-investigation




