கன்னியாகுமரி, ஆண்டு தோறும் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தன்று அம்மன் கோவில்களில் ஆடிப்பூர விழா கோலாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு ஆடிப்பூர விழா நாளை கொண்டாடப்படுகிறது. ஆடிப்பூரத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் நாளை காலை அம்மனுக்கு எண்ணெய், பால், மஞ்சள் பொடி, மா பொடி, தயிர், பன்னீர், தேன், களபம், சந்தனம், குங்குமம் உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து விசேஷ பூஜைகளும் சிறப்பு வழிபாடுகளும் நடக்கிறது. அதன் பிறகு அம்மனுக்கு வளையல் அலங்காரத்துடன் சிறப்பு தீபாராதனை நடக்கிறது. அதன் பின்னர் அம்மனுக்கு கஞ்சி படையல் வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. கொழுக்கட்டை மற்றும் கூழ் பயைலிட்டும் வழிபடுவார்கள். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்வார்கள். சில கோவில்களில் பெண் பக்தர்கள் செவ்வாடை அணிந்து தலையில் கஞ்சி கலசம் சுமந்து ஊர்வலமாக சென்று அம்மனுக்கு படையலிட்டு வழிபடுவார்கள். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கஞ்சி தர்மம் மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது. சிறப்பு வழிபாடுகள் கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் உள்ள பார்வதி அம்பாளுக்கு ஆடிப்பூரத்தையொட்டி நாளை காலை 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் இரவு 7.15 மணிக்கு வாகன புறப்பாடும் 8 மணிக்கு பள்ளியறை பூஜையும் நடக்கிறது. கொட்டாரம் கீழத்தெருவில் உள்ள ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அதன் பிறகு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் மதியம் கஞ்சி தர்மம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு அலங்கார தீபாராதனையும் இரவு 7மணிக்கு புஷ்பாபிஷேகமும் அர்ச்சனையும் நடக்கிறது. 8 மணிக்கு அலங்கார தீபாராதனையும் 9 மணிக்கு அருட்பிரசாதம் வழங்குதலும் நடக்கிறது. முத்தாரம்மன் கோவில் இதேபோல கன்னியாகுமரி வடக்கு ரத வீதியில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி முத்தாரம்மனுக்கும், அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. மாலை 6 மணிக்கு அம்மனுக்கு மா காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. இரவு 8 மணிக்கு முத்தாரம்மனுக்கு 1008 வளையல்கள் அணிவிக்கப்பட்டு அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகளும் விசேஷ பூஜைகளும் நடக்கிறது. முன்னதாக விநாயகருக்கு முதல் பூஜை நடக்கிறது. பரிவார தெய்வங்களான உச்சிமாகாளி அம்மன், பைரவர் சுவாமி, சுடலை மாடசுவாமி, பலவேசக்கார சுவாமி, முண்டன் சுவாமி ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் அலங்கார தீபாராதனை நடக்கிறது. இதில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொணடு அம்மனுக்கு வளையல் வழங்கி வழிபாடு செய்வார்கள். பின்னர் பக்தர்களுக்கு அந்த வளையல் அருள் பிரசாதமாக வழங்கப்படுகிறது. நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திலும் ஆடிப்பூர விழா நாளை கொண்டாடப்படுகிறது. கொட்டாரம் முத்தாரம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி நாளை காலை சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள், சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனை, அம்மனுக்கு கூழ் படைத்தல், அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதேபோல் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள 24-வது சக்தி பீடமான தியாக சௌந்தரி அம்மன் என்ற பத்திரகாளி அம்மன் கோவில், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், பெருமாள்புரம் வெட்டி முறிச்சான் இசக்கி அம்மன் கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், முத்தாரம்மன் கோவில், முப்பந்தல் இசக்கியம்மன் கோவில், ஆலமூடு அம்மன் கோவில், நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் நாளை ஆடிப்பூர சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. இதில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்வார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/devotional/kanyakumari-aadi-pooram-special-rituals-at-amman-temples-tomorrow



