மதுரை, ரூ.100 கோடி மதிப்பிலான பழனி கோவில் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் என்பவர் உயிரிழந்தார். மோசடி பத்திரப்பதிவு பழனி கோவில் அடிவாரம் பகுதியில் தண்டபாணி சுவாமிகள் மடத்தின் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் உள்ளது. இந்த நிலம் கடந்த மாதம் 6-ந்தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில், தனி நபர்களுக்கு ரூ.2 கோடிக்கு கிரையமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த மோசடி தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நிலத்தை விற்பனை செய்த விழுப்புரத்தைச் சேர்ந்த ஆசிரியர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை (60), சேதுபதி (67) அவர்களுக்கு உதவிய பழனி கவுண்டன்குளம் பகுதியை சேர்ந்த வக்கீல் அன்வர்தீன் (65) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து கடந்த 3 நாட்களாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். நேரில் விசாரணை அதேநேரம் இந்த வழக்கில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் நெஞ்சுவலி காரணமாக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனால் அவரை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்த முடியவில்லை. இதையடுத்து மாஜிஸ்திரேட் பாக்கியராஜ் அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் வந்து ஜஸ்டின் மணிகண்டனிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அவரை வருகிற 21-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுச்சென்றார். நீதிமன்ற காவல் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஜஸ்டின் மணிகண்டனுக்கு 2 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட இருக்கிறது. அதன் பிறகு அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டால் மதுரை சிறைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே ஆசிரியர் முருகதாஸ், சேதுபதி, அன்வர்தீன் ஆகியோர் தரப்பில் ஜாமீன் கேட்டு திண்டுக்கல் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்களை தள்ளுபடி செய்து நேற்று கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து மாலையில் ஆசிரியர் முருகதாஸ் உள்பட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 12-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் பாக்கியராஜ் உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். உயிரிழப்பு இந்நிலையில் பழனி கோவில் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அன்வர்தீன் என்பவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது, வழியில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-100-crore-palani-temple-land-scam-arrested-individual-dies-in-prison




