சென்னை, இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்காற்றிய தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 157-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் மரியாதையையும் புகழாரத்தையும் செலுத்தி வருகின்றனர். நயினார் நாகேந்திரன் சத்தியம், அகிம்சை, எளிமை மற்றும் அறவழிப் போராட்டம் ஆகியவற்றை தனது வாழ்வின் அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்டு, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மக்களை ஒன்றிணைத்த தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாள் இன்று. தன்னலமற்ற சேவை, சமூக நல்லிணக்கம், ஏழை எளிய மக்களின் நலன் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயம் என்ற அவரது உயரிய சிந்தனைகள், இன்றும் நம் சமூகத்திற்கு வழிகாட்டும் ஒளியாக திகழ்கின்றன. அவர் கடைப்பிடித்த எளிமையும், உண்மைக்கான உறுதியும் ஒவ்வொருவருக்கும் ஊக்கமளிக்கும் வாழ்வியல் பாடங்களாகும். மகாத்மா காந்தி அவர்களின் சத்தியம் மற்றும் அகிம்சை வழியை நினைவில் கொண்டு, நாட்டின் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் என்று தெரிவித்தார். வானதி சீனிவாசன் சத்தியம், அகிம்சை, சத்தியாகிரகம், சர்வோதயம், சுதேசி, சமத்துவம் மற்றும் தூய்மை ஆகியவற்றை வாழ்வின் உயர்ந்த லட்சியங்களாகக் கொண்டு வாழ்ந்த மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தில் தேசத்தின் விடுதலைக்காகவும், சமூக மாற்றத்திற்காகவும் அவர் ஆற்றிய அளப்பரிய அரும்பணிகளை நினைவு கூர்ந்து போற்றுவோம். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மனதின் குரல் நிகழ்ச்சியின் வாயிலாகக் கூறியபடி தூய்மையான பாரதத்தினை உருவாக்கிடும் நோக்கில், நமது சுற்றுப்புறத்தினைத் தூய்மையாகப் பராமரிப்பதே மகாத்மா காந்திக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி என தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி அகிம்சை என்னும் ஒற்றை ஆயுதத்தால் உலக வல்லரசின் பேரரசை அசைத்துப் பார்த்த அறத்தின் திருவுருவம். சமத்துவம், எளிமை, சத்தியம் ஆகியவற்றைத் தன் வாழ்நாளெல்லாம் மூச்சாகக் கொண்டு, இந்தியாவின் ஆன்மாவை மீட்டெடுத்த மாமனிதர்! உடையைத் துறந்து, எளிய வாழ்வை ஏற்று, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய், கிராமங்களின் உயிர்ப்பாய், இந்தியாவின் பெயரை உலகரங்கில் உயர்த்திய 'தேசத் தந்தை' மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளான இன்று. தாய்த்திருநாட்டிற்கு அவர் ஆற்றிய ஈடு இணையற்ற சேவைகளைப் போற்றி வணங்குவதோடு, மகாத்மா காட்டிய சத்திய பாதையில் வழுவாது நின்று, அறவழியில் என்றென்றும் பயணிப்போம் என இந்நாளில் உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளார். ஜோதிமணி அன்பும் அகிம்சையுமே வெறுப்பையும் வன்முறையையும் வெல்லும் பேராயுதம் என்று உலகிற்கு உணர்த்திய மாபெரும் தலைவர் மகாத்மா காந்தி. அவரது பிறந்தநாளில், காந்தியடிகள் காட்டிய கொள்கை வழியில் நின்று, உண்மையையும் அமைதியையும் கவசமாகக் கொண்டும் வெறுப்புப் பிரச்சாரங்களையும் பொய்களையும் வீழ்த்த உறுதியேற்போம்! அறவழியில் ஜனநாயகத்தைப் பாதுகாத்து, அனைவருக்கும் சமத்துவமும் வளமும் நிறைந்த எதிர்காலத்தைப் படைக்கத் தொடர்ந்து பாடுபடுவோம் என்று தெரிவித்துள்ளார். மாணிக்கம் தாகூர் சத்தியம், அகிம்சை, சமத்துவம், சகோதரத்துவம் அவர் காட்டிய பாதை இன்றும் நம் ஜனநாயகத்தின் அடித்தளமாக திகழ்கிறது. அநீதிக்கு எதிராக குரல் கொடுப்போம்; ஒற்றுமையுடன் சமத்துவ இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம். மகாத்மா காந்தியின் சிந்தனைகளை நெஞ்சில் ஏந்தி, அவர் கனவு கண்ட இந்தியாவை உருவாக்க தொடர்ந்து பயணிப்போம். தேசத் தந்தை அண்ணல் மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளில், அவரை நினைவுகூர்வோம் என்று தெரிவித்தார். கமல் ஹாசன் மகாத்மா காந்தி சுதந்திர இந்தியாவுக்கு விடுத்த மிகப்பெரிய சவால், “என்னைப் பின்பற்றுங்கள்” என்பதல்ல; “நீங்களே சிந்தியுங்கள்” என்பதுதான். இன்றைய நவீன காலத்தில் அரசியல் பிளவுகள், கணநேரத்தில் உருவாகும் கருத்துகள், சமூக வலைதளங்களில் வைரலாகும் கோபம் என பல்வேறு தாக்கங்கள் நிறைந்துள்ளன. இத்தகைய சூழலில் காந்தி இந்தியாவுக்கு என்ன அர்த்தம்? ஒருவேளை, முன்பைவிட இன்றுதான் அவரது சிந்தனை மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. எந்த அரசியல் கட்சியிடமோ, கொள்கையிடமோ, கூட்டத்திடமோ, சமூக வலைதள பிரபலரிடமோ அல்லது அல்காரிதத்திடமோ நமது அரசியல் மனசாட்சியை ஒருபோதும் ஒப்படைத்துவிடக் கூடாது என்று தெரிவித்தார். அண்ணாமலை ஆங்கிலேய ஆட்சியின் அடக்குமுறைக்கு எதிராக அகிம்சை வழியில் போராடி, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெரும் பங்காற்றிய தேசப்பிதா மகாத்மா காந்தி அடிகளின் பிறந்த தினம் இன்று. நேர்மை, பணிவு, எளிமை, தன்னலமற்ற சேவை ஆகியவற்றை தனது வாழ்வில் கடைப்பிடித்தவர் மகாத்மா காந்தி அடிகள். தேசத்தின் விடுதலைக்காகத் தனது வாழ்வையே அர்ப்பணித்தவர். அவரது தியாகமும் தேசபக்தியும் என்றும் நமக்கு வழிகாட்டியாக இருக்கட்டும் என்று தெரிவித்துள்ளார். பிரேமலதா விஜயகாந்த் தேசத்தின் விடுதலைக்காக அகிம்சை மற்றும் சத்தியத்தின் பாதையில் பயணித்து, எளிமையையும் நேர்மையையும் உலகிற்கு எடுத்துக்காட்டிய மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளில், அவரை நினைவு கூறுவோம். அவரது கொள்கைகளையும், சத்தியம் மற்றும் அகிம்சை வழியையும் போற்றுவோம் என தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/gandhi-jayanti-political-party-leaders-pay-tribute




