சென்னை, தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013-ல் முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய பிரதமர் மோடிக்கு, முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்துள்ள கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை கடந்த ஜூன் 24-ம் தேதி வெளியிட்ட 2026-ம் ஆண்டு தேசிய உணவு பாதுகாப்பு (திருத்த) சட்ட வரைவின் காரணமாக, தமிழ்நாட்டு மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படும். 2013-ம் ஆண்டு தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 3-ன்கீழ், அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் மூலமாக தகுதிவாய்ந்த குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் உணவுப் பொருள் உரிமைகளை குறைப்பதற்கு இத்திருத்தம் வகை செய்கிறது. தற்போதைய நடைமுறையின்படி, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளாமல், ஒரு குடும்பத்திற்கு மாதமொன்றிற்கு 35 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. தற்போது முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தின்படி, ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக மொத்தம் 35 கிலோ என்ற உச்சவரம்புக்கு உட்பட்டு, நபர் ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு 7 கிலோ உணவு தானியங்கள் மட்டுமே வழங்கப்படவுள்ளது. இது ஏழைக் குடும்பங்களை கடுமையாக பாதிக்கும். தமிழ்நாட்டின் சராசரி குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை 3.54 ஆக மட்டுமே உள்ளது. இத்திருத்தம், நடைமுறைக்கு வந்தால் இத்தகைய குடும்பங்களுக்கு 35 கிலோ உணவு தானியம் கிடைக்காது. குறைந்துவிடும். மத்திய அரசு தமிழகத்திற்கு இலவசமாக மாதம் தோறும் வழங்கும் அரிசி, கோதுமை, கேழ்வரகு போன்ற 65,261 டன் உணவு தானியங்கள், 42,040 டன்னாகக் குறைந்துவிடும். இதனால் தமிழ்நாட்டில் 18,64,600 அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகள் மூலம் பயன் பெறும் 69,26,983 ஏழை பயனாளிகள் பாதிக்கப்படுவர். ஒவ்வொரு குடும்பத்திற்கும் 50 கிலோ உணவு தானியத்தை மாதம் தோறும் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கிடைத்து வரும் 35 கிலோவையும் குறைக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுவது கண்டனத்திற்குரியது. இது ஏழைகளின் உணவு பாதுகாப்பிற்கு எதிரானது. எனவே, "2013-ம் ஆண்டு தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 3, உட்பிரிவு (1)-ன் முதலாவது வரம்பு நிபந்தனைக்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய், பிரதமர் மோடிக்கு, கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளதை மத்திய பாஜக அரசு ஏற்க வேண்டும். ஏழைகளுக்கு எதிரான இத்திருத்தத்தை உடனடியாக கைவிட வேண்டும் என மத்திய பாஜக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/food-security-act-amendment-should-be-abandoned-communist-party-of-india




