மதுரை, மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 'தமிழ் தேசிய எழுச்சி மாநாடு' தொடர்பான செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் பேசியதாவது;- “ஒரு இயக்கம் உயிர்ப்போடு இருக்க வேண்டுமானால் 2 விஷயங்கள் தேவை. ஒன்று கொள்கை, கோட்பாடு என்கிற உயிர்ப்பு ஆற்றல். இன்னொன்று அதற்கான களமும், பணிகளும், போராட்டங்களும். கொள்கை, கோட்பாட்டை மட்டும் வைத்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாது. வெறும் கோட்பாட்டை பேசிக்கொண்டு எதுவும் செய்ய முடியாது. அதற்கான களம் அமைப்பது, அந்த களத்தில் நின்று போராடுவது என்பதுதான் ஒரு இயக்கத்தை உயிர்ப்தோடு வைத்திருப்பதற்கான அடிப்படை தேவைகளில் ஒன்று. இது வெறும் தேர்தலுக்காக உருவான இயக்கம் இல்லை. மக்களின் தேவைக்காக உருவான இயக்கம். பெரும் பதவி அதிகாரம் என்கிற வேட்கையில் உருவான இயக்கம் இல்லை. இது மக்களின் பாதுகாப்புக்காக உருவான இயக்கம். இது பதவிக்கானது அல்ல, பாதுகாப்புக்கானது. எப்படியெல்லாம் வேலை செய்தால் ஓட்டு வாங்க முடியும் என்று சிந்திக்காமல் எப்படியெல்லாம் வேலை செய்தால் மக்களை பாதுகாக்க முடியும் என்று சிந்திக்கிற இயக்கம் இந்த இயக்கம். எப்படியெல்லாம் வேலை செய்தால் தொகுதி பங்கீடு செய்து கொள்ள முடியும் என்று சிந்திக்கிற இயக்கம் இல்லை இந்த இயக்கம். எப்படியெல்லாம் வேலை செய்தால் மக்கள் சந்திக்கிற சவால்களை எதிர்கொள்ள முடியும் என்று சிந்திக்கிற இயக்கம். ஆகவேதான் எத்தனை சுனாமிகள் அடித்தாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சேதப்படாமல் இருக்கிறது. இப்படித்தான் நாம் தொடக்க காலத்தில் இருந்தே இந்த இயக்கத்தை உயிர்ப்போடு வைத்திருக்கிறோம். இந்த இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த பங்களிப்பை செலுத்தியதன் அடிப்படையில்தான் இந்த இயக்கம் நாளுக்கு நாள் வலிமை பெற்று இன்றைக்கு தமிழகத்தில் ஒரு மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றிருக்கிறது. பொருளாதார வலிமை பெற்ற யாரும் நம்மோடு இல்லை. தொழிலதிபர்களோ, பெரு வணிகர்களோ, ஒப்பந்ததாரர்களோ இந்த இயக்கத்தில் யாருமில்லை. இந்த இயக்கத்திற்கு பெரிதாக கொடை அளிப்பதற்கும், துணை இருப்பதற்கும் தொழிலதிபர்களோ, பெரு வணிகர்களோ, ஒப்பந்ததாரர்களோ தயாராகவும் இல்லை. சமகாலத்தில் நம்மோடு களத்திற்கு வந்த எத்தனையோ பல இயக்கங்கள் காணாமலும் போயிருக்கின்றன, வலுவிழந்து நீர்த்தும் போயிருக்கின்றன. ஆனால் எந்த பின்புலமும் இல்லாமல், யாருடைய தயவும் இல்லாமல், நம் சொந்த கைகளை ஊன்றி கரணம் போட்டு ‘அந்தரத்திலே பந்தல் கட்டுவது’ என்பார்களே, அப்படி அந்தரத்தில் பந்தல் கட்டி இன்றைக்கு ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக இந்த இயக்கம் பரிணாமம் அடைந்திருக்கிறது. அதை பெருமையோடு சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன். அதிலும் இந்த இயக்கத்தின் கிளைகள் எங்கு வேண்டுமானாலும் பரவி தழைத்திருக்கலாம். ஆனால் இந்த இயக்கத்தின் ஆணிவேர் மதுரை மண்தான் என்பதை என்றென்றைக்கும் பெருமையோடு பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன். இந்த இயக்கம் இன்றைக்கு எளிய மக்களுக்குக்கான ஒரு பாதுகாப்பு அரணாக விளங்குகிறது.” இவ்வாறு அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/vck-is-not-a-movement-formed-for-elections-it-was-formed-for-the-needs-of-the-people-thirumavalavan




