மதுரை ஹார்விபட்டி பகுதியை சேர்ந்தவர், சுப்பையா. 82 வயதான இவர், மதுரா கோட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து ஒய்வுபெற்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக மனைவி உயிரிழந்த நிலையில், பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில், தனியாக வாடகை வீட்டில் வசித்துவருகிறார் இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் நிசாந்த கிருஷ்ணாவிடம் தனது வங்கிக் கணக்கில் உள்ள 30 லட்சம் ரூபாய் டெபாசிட் தொகை மற்றும் தனது பெயரில் வங்கி லாக்கரில் உள்ள 30 லட்சம் மதிப்பிலான தங்க பொருள்கள் ஆகியவற்றிற்கான உயில் ஆவணத்தை இந்திய ராணுவ வீரர்களுக்காக கொடிநாள் நிதியாக ஒப்படைத்தார். மேலும் பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலையையும் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். இவர் தன்னுடைய உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவ கல்லூரிக்கு தானமாக எழுதி வைத்துள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்ட முகாமில் முதியவர் சுப்பையா கொடிநாள் நிதியாக 60 லட்சம் ரூபாய் உயில் ஆவணத்தை வழங்கியதைப் பாராட்டும் வகையில், அங்கிருந்த அனைத்து அரசு அதிகாரிகளும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தனர். சுப்பையா இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதியவர் சுப்பையா, “எனக்கு பிள்ளைகள், மனைவி என யாருமில்லை; நமது நாட்டைக் காப்பாற்றுவது ராணுவம்தான். அவர்களுக்கு எவ்வளவு செய்தாலும், அது நமக்கு மனது திருப்தியைத் தரும். 60 லட்சம் மதிப்பிலான டெபாசிட் தொகை, லாக்கர் ஆகியவற்றை பணமாக எடுத்து ராணுவ வீரர்களுக்காக வழங்க முயன்றேன். ஆனால் வங்கிகளில் அதனை அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக உயில் ஆவணமாக வழங்கியுள்ளேன். மேலும் பத்தாயிரம் காசோலை கொடுத்துள்ளேன். சேமிப்பில் இருந்து மாத மாதம் வரும் வட்டிப் பணத்தையும் கொடுக்கவுள்ளேன், அதுதான் என்னுடைய நோக்கம். ராணுவ வீரர்கள் வீட்டிற்கு வரும்போது அவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். இது ஆத்ம திருப்தியாக உள்ளது. நான் இருந்தாலும் இறந்தாலும் திருப்தியாக உள்ளேன். ஆத்ம திருப்திக்காக கொடுத்துள்ளேன். சுப்பையா நாட்டு மக்கள் அத்தனை பேரும் தங்களுடைய மொத்த சேமிப்பிலிருந்து கடைசி காலத்தில் 1% ராணுவத்திற்காக வழங்க வேண்டும் என்பதை சட்டமாக இயற்ற வேண்டும். ராணுவ வீரர்கள் நமக்காக எவ்வளவோ கஷ்டப்பட்டு நம்மை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும். 2013 ஆம் ஆண்டு என்னுடைய உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக எழுதி வைத்துவிட்டேன்” என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/governance/madurai-elderly-man-donates-60-lakh-to-the-indian-army-officials-stood-up-and-applauded




