நியூயார்க் அண்டவெளியில் கண்டறியப்பட்ட, வியாழனை போல் உருவில் பெரிய இளம் கோள் பற்றிய ஆய்வில் புது தகவல் வெளியாகி உள்ளது. நட்சத்திரங்களில் ஒன்றான சூரியனை சுற்றி பூமி, புதன், வியாழன் உள்ளிட்ட கோள்கள் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. இந்த சூரிய குடும்பம் பல ஆச்சரியங்களை உள்டக்கியது. பல கோடி நட்சத்திரங்களை உள்ளடக்கிய பால்வெளி மண்டலத்தில் நாம் வாழும் சூரிய குடும்பம் போன்று வேறு சில சூரிய குடும்பங்களும் உள்ளன. ஆனால், அவை பல ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருக்கும். அதுபோன்று, தங்களுடைய நட்சத்திரங்களில் இருந்து சற்று தொலைவில் சுற்று வட்டப்பாதைகளை அமைத்து, அவற்றை சுற்றி வரும் கோள்கள் புறக்கோள்கள் எனப்படும். இந்த நிலையில் வானியல் ஆய்வாளர்கள், நம்முடைய சூரிய குடும்பத்தில் உள்ள வியாழன் கிரகம் போன்ற உருவில் மிகப்பெரிய கோள் ஒன்றை கண்டறிந்து உள்ளனர். இளம் கோள் இதில் விசேஷம் என்னவென்றால், அந்த கோளானது 10 லட்சம் ஆண்டுகள் வயது கொண்டது. இதனால், இளம் கோள் என விஞ்ஞானிகள் அதனை குறிப்பிடுகின்றனர். அதற்கு எலியாஸ் 2-24 பி என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. பூமியில் இருந்து 450 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா பல புகைப்படங்கள், ஆவணங்களை கொண்ட தொகுப்புகளை வைத்துள்ளது. அவற்றை ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்ததன் விளைவாக இந்த கண்டுபிடிப்பு தெரிய வந்துள்ளது. வாயு மற்றும் தூசியால் சூழப்பட்டு உள்ள அந்த கோள், இளம் நட்சத்திரத்தின் தூசிப்படலம் கொண்ட வளையத்திற்குள் தன்னுடைய சுற்று வட்டப்பாதையை அமைத்து சுற்றி வருகிறது. இதனால், கோள்கள் எவ்வாறு உருவாகின்றன? என்று அறிந்து கொள்வதற்கான அரியதொரு வாய்ப்பாக இதனை விஞ்ஞானிகள் பார்க்கின்றனர். மறைந்திருக்கும் கோள்கள் இந்த புறக்கோள்களை கண்டறிவதும் அவ்வளவு எளிதல்ல. சூரியனின் வெளிவட்ட பகுதியில் தெரியும் பிரகாச ஒளியை வெகுவாக குறைத்து, ஒளிவளைய வரைபடம் உருவாகும்போது, அதில் லேசாக தெரியும் உருவங்களை ஆய்வு செய்வார்கள். அந்த அடிப்படையில் தூசி படர்ந்த வளையங்களில் மறைந்திருக்கும் கோள்களை வானியல் அறிஞர்கள் தேடி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுவர். இதுபோன்று 7 இளம் கோள்களை பற்றி ஆய்வு நடந்து வருகிறது. அவற்றில், இந்த கோள்கள் உருவாகும்போது காணப்பட்ட வாயு, தூசி, பனித்துண்டுகள் மற்றும் பாறை ஆகியவற்றுடன் தொடர்ந்து அவை சுற்றி வருகின்றன. இந்த கோள்களின் வளையங்களில் காணப்படும் இடைவெளிகளும் மற்றும் பிற அம்சங்களும், கோள்களின் உருவாக்கத்திற்கான தொடக்கக்கட்ட நடைமுறையிலேயே அவை இன்னும் தொடர்ந்து இருக்கின்றன என தெரிய வந்துள்ளது. இதனால், பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய சூரிய குடும்பம் எப்படி இருந்திருக்கும்? என்பது பற்றிய ஆய்விற்கு இது உதவியாக அமையும் என்பது கவனிக்கத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/young-planet-discovered-in-space-new-findings-revealed-in-study




