நீட் தேர்வு மூலமாக நம்மிடம் இருந்து மருத்துவக் கல்வியை முழுமையாக எடுக்க பார்க்கிறார்கள் என்று இயக்குநர் வெற்றிமாறன் விமர்சித்துள்ளார். மாணவர்களின் போராட்டம் என்பது மத்திய அரசின் தோல்வி என்று கூறியுள்ள வெற்றிமாறன், நம்மை அவர்களிடம் கைகட்டி நிற்க வைக்க முயற்சிக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். நீட் எதிர்ப்பு மாணவர் போராட்டத்திற்கு திரைப்பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர் தலைமையில் சென்னையில் போராட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர் அமைப்புகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. டெல்லி ஜந்தர் மந்தர் முதல் தமிழகத்தின் பல மாவட்டங்கள் வரை போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், மாணவர்களின் இந்த நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் நேரடியாகக் களம் இறங்குகின்றனர். நீட் முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் CJP, SFI, DYFI உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. சென்னை தலைமைச் செயலகம் மற்றும் எழும்பூர் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இசைக்கலைஞர் அறிவு போன்றோர் கைது செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. வடமாநிலத்தில் ஆலியா பட், சல்மான் கான் போன்ற பிரபலங்கள் குரல் கொடுத்துள்ள நிலையில், தென்னிந்திய திரையுலகம் சென்னை மண்ணில் நேரடியாக வீதியில் இறங்கி போராடத் துணிந்துள்ளது. நடிகர் பிரகாஷ் ராஜ் நேரடியாக போராட்டத்தில் கலந்து கொண்டார். இயக்குநர் பா.ரஞ்சித், வரலட்சுமி சரத்குமார், இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலர் தங்களது சமூக வலைதளப் பக்கம் மூலமாக ஆதரவு குரல் எழுப்பியுள்ளனர். இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீலம் பண்பாட்டு மையம் சார்பில் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் சென்னை எழும்பூரில் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இன்று மாலை 3 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர், லெனின் பாரதி, சத்யராஜ், மன்சூர் அலிகான், நடிகர் கலையரசன், பாடகர் அறிவு, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர் கலந்து கொண்டனர். மேலும் நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இவர்களோடு நடிகை ஆண்ட்ரியாவும் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், “மாணவர்களின் போராட்டத்திற்கு எங்களின் ஆதரவை வழங்குகிறோம். ஒரு நாட்டில் மாணவர்கள் போராட்டத்திற்கு வந்துவிட்டார்கள் என்றால், அந்நாட்டில் மற்ற அமைப்புகள் சரியாக செயல்படவில்லை என்பதுதான் அர்த்தம். ஒரு மாணவர் போராட்டம் என்பது அரசின் தோல்வி. காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டம் மத்திய அரசின் தோல்வி. அவர்களின் போராட்டம் நீட் தேர்வு ரத்துக்கானதாக மாற வேண்டும். அந்த முன்னெடுப்புகளை நாம் கொண்டு சொல்ல வேண்டும். நீட் தேர்வுக்கான அழுத்தம் என்ன என்பதை நானும் நேரடியாக பார்க்கிறேன். என்னுடைய நண்பனின் குழந்தை அதிக மதிப்பெண் எடுத்த போதும் கூட, அவனால் நீட் தேர்வில் பாஸ் செய்ய முடியவில்லை. அதாவது அவனின் தந்தையால் கட்டணம் கட்டும் அளவிற்கான கல்லூரியில் சேரும் அளவிற்கான மதிப்பெண்ணை எடுக்க முடியவில்லை. நீட் தேர்வு மூலமாக நம்மிடம் இருந்து மருத்துவக் கல்வியை முழுமையாக எடுப்பதும், மருத்துவ அறிவை எடுப்பதும் தான் அவர்களின் செயல்பாடாகவே இருக்கிறது. நம்மை அவர்களிடம் கைகட்டி நிற்க வைப்பதற்கான ஒரு முயற்சியாகவே இருக்கிறது. நீட் தேர்வு ரத்து குறித்து தொடர்ந்து பேசி கொண்டே இருக்கிறோம். நீட் தேர்வை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். NEET | VetriMaaran | "CJP போராட்டம். மத்திய அரசின் தோல்வி." "Fair NEET. Ban NEETஆ மாறனும்." — Thanthi TV (@ThanthiTV) July 23, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/student-protests-are-a-failure-of-the-central-government-director-vetrimaran




