மகாராஷ்டிராவில் மராத்தா இட ஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜராங்கே கடந்த மாதம் 29-ம் தேதியில் இருந்து ஜல்னாவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தார். மராத்தா மக்களுக்கு சாதிச்சான்று விரைந்து வழங்க வேண்டும் என்று கோரி இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வந்தார். மும்பையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு மனோஜ் ஜராங்கே தரப்பில் இரண்டு முறை மனு கொடுக்கப்பட்டது. ஆனால் மும்பையில் இப்போது விநாயகர் சதுர்த்தி விழா முழு வேகத்தில் நடந்து வருவதால் இந்த நேரத்தில் அனுமதி கொடுத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கூறி போலீஸார் ஒப்புதல் கொடுக்க மறுத்துவிட்டனர். மூன்றாவதாக மேலும் ஒரு கோரிக்கை மனு மனோஜ் ஜராங்கே தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் 50 பேருடன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றும், அனைத்து விதிகளும் பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸார் அனுமதி கொடுக்காவிட்டாலும் மும்பைக்கு வருவேன் என்று கூறி மனோஜ் ஜராங்கே இப்போது ஜல்னாவில் இருந்து ஆதரவாளர்கள் சிலருடன் மும்பை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் பதினெட்டாவது நாளில், ஜல்னாவில் உள்ள தனது கிராமத்திலிருந்து புறப்பட்ட ஜராங்கே, வரும் 19ம் தேதி மும்பையின் ஆசாத் மைதானத்தில் தனது உண்ணாவிரதத்தைத் தொடரப்போவதாக அறிவித்துள்ளார். அவரது வாகன அணிவகுப்பு பீட், அகில்யாநகர், புனே மற்றும் ராய்காட் வழியாக மும்பை செல்கிறது. இது குறித்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அளித்த பேட்டியில், ''சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பது காவல்துறையின் பொறுப்பு. கணேஷோத்ஸவத்தின் போது மக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக் கூடாது. ஜராங்கேவின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்பட்டுவிட்டன. அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டால் மும்பையில் போராட்டம் நடக்கும். மராத்தா போராட்டக்காரர்கள் முன்வைத்த கோரிக்கைகளில், சட்டரீதியாகச் செல்லுபடியாகக்கூடிய 12 கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. எஞ்சிய கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதில் சட்டரீதியான தடைகள் இருக்கிறது. பண்டிகைக் காலங்களில் இத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குப் பதிலாக, மக்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாத வகையில் அவர்கள் முடிவெடுக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்," என்றும் அவர் கூறினார் இதே போன்று மாநில இணையமைச்சர் ஆஷிஷ் ஜெய்ஸ்வால் அளித்த பேட்டியில்,'' ஜராங்கேவின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுவிட்டது. தற்போது தேவையில்லாமல் ஒரு போராட்டத்தை அவர் நீட்டித்து வருகிறார்'' என்று குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் மராத்தா சமூகத்தின் விஷயத்தில் அரசு தொடர்ந்து தோல்வியடைந்து வருவதாகக் குற்றம்சாட்டிய ஜராங்கே, போராட்டத்தைத் தொடரப்போவதாக உறுதியளித்தார். ``நான் அரசுக்கு அடிபணியமாட்டேன்," என்று கூறிய அவர், மராத்தா இளைஞர்களுக்கும் வருங்கால சந்ததியினருக்கும் நீதி பெற்றுத் தருவதே இந்தப் போராட்டத்தின் நோக்கம் என்றும் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/trending/maratha-reservation-activist-manoj-jarange-marching-towards-mumbai-with-his-supporters




