புதுடெல்லி, அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு(FAS) சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவின் அணு ஆயுதக் களஞ்சியத்தில் 190 போர் குண்டுகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், உற்பத்தியில் உள்ள புதிய ஏவுகணைகளுக்கான 30 கூடுதல் குண்டுகளும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தகவல்கள், அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட தரவுகள் மற்றும் வணிக செயற்கைக்கோள் படங்கள் ஆகியவற்றின் கலவையான பகுப்பாய்வுகளில் இருந்து அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு இந்த மதிப்பீடுகளை பெற்றுள்ளது. இது குறித்து அந்த கூட்டமைப்பின் திட்ட இயக்குநர் ஹான்ஸ் கிறிஸ்டென்சன் எழுதிய கட்டுரையில், “அணு ஆயுதங்களை ஏவக்கூடிய படை அமைப்பு மற்றும் திறன் தொடர்பான பொதுத் தகவல்களின் அடிப்படையில், இந்தியா சுமார் 190 அணு ஆயுத போர் குண்டுகளை உற்பத்தி செய்திருக்கலாம் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம்” என்று தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்ட அந்த கட்டுரையில், இந்தியா தனது அணு ஆயுதக் களஞ்சியத்தை தொடர்ந்து நவீனமயமாக்கி வருவதாகவும், சமீபத்திய ஆண்டுகளில் பல புதிய ஆயுத அமைப்புகள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதுள்ள அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட விமானங்கள், தரைவழி விநியோக அமைப்புகள் மற்றும் கடல்வழி அமைப்புகளுக்குத் துணையாகவோ அல்லது மாற்றாகவோ மேலும் பல அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், “இந்தியா 140 முதல் 225 அணு ஆயுத குண்டுகளுக்கு தேவையான புளூட்டோனியத்தை உற்பத்தி செய்திருக்கலாம் என்றும், சுமார் 190 ஆயுதங்களை ஒருங்கிணைத்திருக்கலாம் என்றும் நாங்கள் மதிப்பிடுகிறோம். மேலும் பல ஆயுத அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருவதால், நாட்டின் ஆயுத கையிருப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது" என்றும் அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/indias-nuclear-arsenal-is-estimated-to-contain-190-warheads




