மதுரை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. இயக்குனர் மீதான கோர்ட்டு அவமதிப்பு கோரிக்கையை நாங்கள் விசாரிக்க இயலாது என நீதிபதிகள் தெரிவித்து, இது சம்பந்தமான மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர். துப்பாக்கிச்சூடு வழக்கு தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22.5.2018 அன்று ஏராளமானவர்கள் பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் சிலர், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்குள் புகுந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் திடீரென போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி 14.8.2018 அன்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் சி.பி.ஐ. இந்த வழக்கை விசாரித்தது. இந்தநிலையில் இந்த விவகாரத்தில் உயர் அதிகாரிகளை தப்ப வைக்கும் நோக்கத்தில் சி.பி.ஐ. செயல்படுவதாகவும், எனவே கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வக்கீல் ஏ.கண்ணன், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "துப்பாக்கிச்சூடு வழக்கில் ஒரே ஒரு இன்ஸ்பெக்டர் மீது மட்டுமே குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. தொடர்ந்து பல ஆண்டுகளாக அவகாசம் கேட்கின்றனர். எனவே கோர்ட்டு உத்தரவை பின்பற்றாத சி.பி.ஐ. இயக்குனர் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறப்பட்டு இருந்தது. வழக்கு முடித்து வைப்பு இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த விவகாரத்தை பொறுத்தவரையில் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையிலேயே விசாரணையை முடித்து கீழ் கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கையை சி.பி.ஐ. தாக்கல் செய்து உள்ளது. அதில் குறிப்பிடப்பட்ட ஆவணங்கள், சாட்சிகள் உள்ளிட்டவை தொடர்பாக சம்பந்தப்பட்ட கோர்ட்டுக்குதான் உரிய விவரங்கள் தெரியும். எனவே இந்த கோரிக்கையை இந்த கோர்ட்டு விசாரிப்பது பொருத்தமானதாக இருக்காது என்பதால் இந்த மனுவை முடித்து வைக்கிறோம். துப்பாக்கிச்சூடு வழக்கை பொறுத்தவரை பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத்தை அருணா ஜெகதீசன் அறிக்கையின் அடிப்படையில் அரசு வழங்கும் என்று நம்புகிறோம். இவ்வாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-firing-incident-what-decision-did-the-court-take




