சேலம், அம்மா உணவகங்கள் சேலம் மாநகராட்சியில் அஸ்தம்பட்டி, வின்சென்ட், அரசு ஆஸ்பத்திரி, சூரமங்கலம், மணியனூர், சத்திரம், பழைய சூர மங்கலம், அம்மாப்பேட்டை, கருங்கல்பட்டி, ஆற்றோரம் காய்கறி மார்க்கெட், வெங்கடப்பன் சாலை ஆகிய 11 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஒவ்வொரு உணவகங்களிலும் தினமும் காலையில் 1,200 இட்லிகள், மதியம் 300 சாம்பார் சாதம், 300 தயிர் சாதம் தயார் செய்யப்பட்டு மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, இட்லி ஒன்று ரூ.1-க்கும், சாம்பார் சாதம் ரூ.5-க்கும், தயிர் சாதம் ரூ.3-க்கும் கொடுக்கப்படுகிறது. 11 அம்மா உணவகங்களில் தினமும் சுமார் 10 ஆயிரம் பேர் வந்து சாப்பிட்டு செல்வதாக அங்கு வேலை செய்து வரும் பெண் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். ரூ.1.10 கோடியில் சீரமைப்பு இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை புதுப்பித்து மக்களுக்கு சுவையான, தரமான உணவு வகைகளை வழங்க வேண்டும் என முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள 11 அம்மா உணவகங்களின் உள்கட்டமைப்புகளை சீரமைக்க ரூ.1 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியை வைத்து அனைத்து அம்மா உணவகங்களிலும் வர்ணம் பூசுதல் (பெயிண்டு அடித்தல்), பழுதடைந்த மின்விசிறிகளை மாற்றி புதிய மின்விசிறிகள் மாட்டுதல், தேவையான அம்மா உணவகங்களில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் வைத்தல், புதிய சமையல் உபகரணங்களை வாங்குதல் உள்ளிட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ள அம்மா உணவகங்கள் தற்போது புதுப்பொலிவு பெறுகிறது. குறிப்பாக மணியனூர் பகுதியில் உள்ள அம்மா உணவகத்திற்கு ரூ.20½ லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் அறைகள் கட்டுவதோடு தேவையான சமையல் பாத்திரங்கள் கொள்முதல் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், சூரமங்கலம் உழவர் சந்தை அருகில் அமைந்துள்ள அம்மா உணவகத்திலும் ரூ.20 லட்சத்தில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட உள்ளது. தேவையான பொருட்கள் அதேசமயம் அம்மா உணவகங்களுக்கு வழங்கப்படும் பருப்பு, அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை குறிப்பிட்ட அளவு மட்டும் வழங்குவதாகவும், இதனால் உணவு தரமான முறையில் தயாரித்து வழங்க முடியாத சிரமம் உள்ளதாகவும் அம்மா உணவகத்தில் வேலை செய்து வரும் பெண்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். ஏழை, எளிய மக்களின் பசியை போக்கும் அம்மா உணவகங்களுக்கு தேவையான அளவு பொருட்கள் வழங்குவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அம்மா உணவகங்களுக்கு சாப்பிட வந்துசெல்லும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/11-amma-unavagam-in-salem-corporation-to-get-a-facelift-at-a-cost-of-rs-110-crore




