Full Article
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் தமிழ்த் திரையுலகம் மீண்டும் ஒரு பேரிழப்பைச் சந்தித்திருக்கிறது. திரைக்கதையின் மன்னனாகவும்,சாதாரண மனிதனின் வாழ்க்கையை அசாதாரண திரைக்கதைகளாக மாற்றிய படைப்பாளியாகவும் இந்திய தேசம் போற்றிய இயக்குனர் கே.பாக்யராஜ்,இன்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி,தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களை சுக்குநூறாக்கியுள்ளது.இயக்குனர் இமயம் பாரதிராஜா மறைந்த 16 நாட்களிலேயே,பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே படத்தின் முதன்முதலாக உதவி இயக்குனராக பணியாற்றிய திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜூம் மறைந்திருப்பது,தமிழ் சினிமாவிற்கு ஈடு செய்ய முடியாத இரட்டை பேரிழப்பாக அமைந்துள்ளது.அதுவும் கே.பாக்யராஜின் இழப்பு யாரும் எதிர்பாராதது. கே.பாக்யராஜின் திரைப்பயணம் ஒரு சாதாரண பயணம் அல்ல.அது போராட்டங்களால் நிரம்பிய கனவின் கலைப் பயணம். பாக்கியராஜ் சினிமா மீது தீராத காதலுடன் சென்னை வந்த அந்த இளைஞனுக்கு முதலில் வாய்ப்பு கொடுத்தவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.அவரது உதவி இயக்குநராகப் பணியாற்றிய கே.பாக்யராஜ்,குருவின் அருகில் இருந்து,திரைப்பட மொழியையும்,கதையை உயிர்ப்புடன் சொல்லும் கலையையும் கற்றுக்கொண்டார். '16 வயதினிலே', 'கிழக்கே போகும் ரயில்', 'சிகப்பு ரோஜாக்கள்', 'புதிய வார்ப்புகள்', 'நிறம் மாறாத பூக்கள்' போன்ற படைப்புகளில் உதவி இயக்குநராகவும்,திரைக்கதை பணிகளிலும் பங்காற்றிய அனுபவம்,பின்னாளில் அவரை தனித்துவமான படைப்பாளியாக உருவாக்கியது.பாரதிராஜா கிராமத்தின் மண்வாசனையைத் திரைக்கு கொண்டு வந்தவர் என்றால்,அந்த மண்ணின் மனிதர்களின் புத்திசாலித்தனத்தையும், ஏமாளித்தனத்தையும், அப்பாவித்தனத்தகயும் நகைச்சுவையையும் திரைக்கதையின் வழியாக உயிர்ப்பித்தவர் பாக்யராஜ். இன்று குருவும் இல்லை. சீடனும் இல்லை."பா" வரிசை இயக்குனர்களுள் இரண்டு முக்கிய ஆளுமைகளை அடுத்தடுத்து இழந்திருக்கிறது தமிழ்த் திரையுலகம். திரைக்கதை என்றால் பாக்யராஜ்தான். தமிழ் சினிமாவில் "திரைக்கதை மன்னன்" என்ற பட்டம் வெறும் புகழ்ச்சிக்காக அவருக்கு வழங்கப்படவில்லை. ஒரு சாதாரண குடும்பக் கதையை கூட எதிர்பாராத திருப்பங்களுடன் சொல்லும் திறமை, ஒவ்வொரு காட்சியிலும் அடுத்த நிமிடத்தில் என்ன நடக்கும் என்ற ஆவலை உருவாக்கும் எழுத்து,போகிற போக்கில் நகைச்சுவையிலும் வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லும் பாணி, பெண்களின் மனநிலையையும், குடும்ப உறவுகளையும் இயல்பாகப் பதிவு செய்யும் பாங்கு.இவை அனைத்தும் பாக்யராஜின் திரைக்கதைகளின் அடையாளங்களாக மாறின. அவரது கதைகளின் கதாநாயகன் பெரும்பாலும் வலிமையால் அடித்து நொறுக்கி துவம்சம் செய்யும் அதிரடி ஹீரோக்களாக இருப்பதில்லை. அறிவாலும்,சமயோசித புத்தியாலும்,வெல்பவனாக அனைவராலும் இயல்பாக ஏற்றுக்கொள்ளும் கதாபாத்திரமாகவே இருக்கும்.அதுவே பாக்யராஜின் தனித்துவமான பலம். கே.பாக்யராஜ் இயக்கிய ஒவ்வொரு திரைப்படமும் தமிழ் சினிமாவின் பொக்கிஷமாகவே திகழ்கின்றன. சுவரில்லாத சித்திரங்கள்,ஒரு கை ஓசை,முந்தானை முடிச்சு, அந்த 7 நாட்கள், தூறல் நின்னு போச்சு, டார்லிங்... டார்லிங்... டார்லிங்..., இது நம்ம ஆளு,எங்க சின்ன ராசா,ஆராரோ... ஆரிராரோ! ராசுக்குட்டி, வீட்டிலே விசேஷங்க! இவற்றில் பல திரைப்படங்கள் நூறு நாட்களைத் தாண்டி ஓடியதோடு,பல மொழிகளில் மறு உருவாக்கம் செய்யப்பட்டன. குடும்பம் முழுவதும் அமர்ந்து ரசிக்கக்கூடிய திரைப்படங்கள் என்ற நம்பிக்கையை அவரது திரைப்படங்கள் பெற்றன. பாக்யராஜ் பாக்யராஜின் திரைக்கதை யுத்திகள் பல திரைப்படங்களில் அற்புதமான அம்சங்களாகவே எப்போதும் காணப்படும். முதல் சில நிமிடங்களிலேயே கதையின் மையத்தைப் பார்வையாளரிடம் கொண்டு சேர்த்துவிடுவார்.ஒவ்வொரு சிறிய சம்பவத்திற்கும் பின்னால் பெரிய திருப்பத்தை மறைத்து வைப்பார்.நகைச்சுவையை வெறும் சிரிப்புக்காக அல்ல; கதையை நகர்த்தும் கருவியாகப் பயன்படுத்துவார்.வசனங்களில் இரட்டை அர்த்த நகைச்சுவை இருந்தாலும், பெண்களும் ஒரு நமுட்டுச் சிரிப்புடன் ரசிக்கத்தக்க வகையில் கதையின் ஓட்டத்தை பாதிக்காமல் கையாள்வார். பாக்யராஜ் படமா ரொம்ப மோசம்பா என்று சொன்ன அன்றைய பெண்கள் எல்லாமே கே.பாக்யராஜின் தீவிர ரசிகைகளாகவே இருந்தார்கள்.அதனால்தான் பாக்யராஜின் படங்களும் பல வெள்ளி விழா கண்டன.கிளைமாக்ஸ் வரை சுவாரஸ்யத்தைத் தக்க வைத்து ரசிகர்கள் எதிர்பார்க்காத திருப்பத்தை ஏற்படுத்துவதில் அவருக்கு நிகர் அவர்தான். அதனால் தான்,இன்று வரை திரைப்படப் பள்ளிகளில் கூட அவரது திரைக்கதை அமைப்புகள் எடுத்துக்காட்டாக பேசப்படுகின்றன. 30 ஆண்டுகளுக்கு முன்னால் என்னைப் போன்ற வாசகர்களின் கே.பாக்யராஜின் 'பாக்யா' வார இதழ்தான் அட்டைப்பட கமெண்ட்டுகள்,கவிதைகளை என பிரசுரித்து எழுத்தாளர்களாக மாற்றிய எங்களின் தொடக்கப் பள்ளி அது. திரைப்படங்களுக்குப் பிறகு பாக்யா இதழ் மூலம் எழுத்துலகையும் அவர் வளப்படுத்தினார்.முக்கியமாக டைமிங்க்சென்ஸோடு சொல்லும் அவரது கேள்வி - பதில் பகுதி பிரபலமான ஒன்று. 'பாக்யா' வார இதழ் மூலம் அரசியல், சமூகம்,குடும்பம், சினிமா, இலக்கியம் என பல்வேறு துறைகளில் வாசகர்களைச் சென்றடைந்தார். தனது எழுத்தின் எளிமை, நகைச்சுவை,நேர்மை ஆகியவற்றால் பாக்யா இதழுக்கு தனி வாசகர் வட்டத்தை உருவாக்கினார். திரையில் கதைகளைச் சொன்னவர், வாரந்தோறும் காகிதத்தின் வழியாகவும் மக்களுடன் உரையாடினார்.ஒரு நடிகர் மறைந்திருக்கலாம், ஒரு இயக்குநர் மறைந்திருக்கலாம், ஒரு எழுத்தாளர் மறைந்திருக்கலாம், ஆனால் "திரைக்கதை எப்படி இருக்க வேண்டும்?" என்று கேட்கும் ஒவ்வொரு தலைமுறையும் பாக்யராஜை மீண்டும் தேடிக்கொண்டே இருக்கும். திரை மறைந்தாலும், திரைக்கதை உயிரோடு இருக்கும்.கே.பாக்யராஜ் மறைந்தாலும்,அவர் எழுதிய திரைக் காட்சிகள் தமிழர்களின் நினைவுகளில் என்றென்றும் ஓடிக்கொண்டே இருக்கும்! - க.தங்கபாபு முத்துப்பேட்டை. வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...! Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Full article — see link below




