புதுடெல்லி, வட அரபிக்கடலில் சர்வதேச எல்லைப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய போர் கப்பல் மீது பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் அதிவேகமாக வந்து மோதிய சம்பவம் இரு நாடுகளிடையே ராஜதந்திர பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அபாயகரமான செயல் வட அரபிக்கடலில் குவாடார் அருகே சர்வதேச கடல் பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இந்திய கடற்படைக்கு சொந்தமான முன்னணி போர்க்கப்பல் ஒன்று தனது வழக்கமான கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது அங்கு வந்த பாகிஸ்தான் கடற்படையின் 'பி.என்.எஸ் ஹுனைன்' என்ற கடலோர காவற்படை கப்பல், இந்தியக் கப்பலை பின்தொடரத் தொடங்கியது. இந்திய கடற்படையினர் கடல்சார் அவசர ரேடியோ அலைவரிசையான ‘சேனல் 16’ மூலம் பாகிஸ்தான் கப்பலுக்கு தொடர் எச்சரிக்கைகளை விடுத்தனர். இருப்பினும், அந்த எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் பாகிஸ்தான் கப்பல் திடீரென தனது வேகத்தை அதிகரித்து, தொழில்முறைக்கு மாறான மற்றும் பாதுகாப்பற்ற முறையில் இந்திய போர்க்கப்பலின் முன்பகுதியைக் குறுக்காகக் கடக்க முயன்றது. இந்த அபாயகரமான செயலால் பாகிஸ்தான் கப்பலின் முன்பகுதி, இந்தியப் போர்க்கப்பல் மீது உரசி மோதியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக இந்தியப் போர்க்கப்பலுக்கு எந்தவிதமான கட்டமைப்பு சேதமோ, கடற்படை வீரர்களுக்கு காயங்களோ அல்லது கப்பலின் செயல்பாட்டு பாதிப்போ ஏற்படவில்லை என பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. விபத்துக்கு பிறகும் இந்தியப் போர்க்கப்பல் பாதுகாப்பாகத் தனது கண்காணிப்பு பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்தியா கண்டனம் இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாக கையில் எடுத்த இந்திய அரசு, புதுடெல்லியில் உள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம் (எம்இஏ) வாயிலாக கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் பொறுப்பாளர் சாத் அகமது வாராயிச் இன்று நேரில் அழைக்கப்பட்டு, பாகிஸ்தான் கடற்படையின் "ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் பொறுப்பற்ற" இந்தச் செயலுக்கு இந்தியா தனது வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்தது. இருதரப்பு ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான் கடந்த 1991 ஏப்ரல் மாதம் இந்தியா - பாகிஸ்தான் இடையே கையெழுத்தான ராணுவப் பயிற்சிகள் மற்றும் படை நடமாட்டங்கள் குறித்த முன் அறிவிப்பு ஒப்பந்தத்தின் 10-வது பிரிவை பாகிஸ்தான் கடற்படை நேரடியாக மீறியுள்ளதாக இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துக்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, கடல் பகுதியில் அனைத்து ராணுவப் பிரிவுகளும் உரிய கவனத்துடன் செயல்படுவதையும், இருதரப்பு ஒப்பந்தங்களை மதிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பாகிஸ்தான் தூதரிடம் வலியுறுத்தப்பட்டது. மேலும், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரியும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திடம் இதே போன்றதொரு அதிகாரப்பூர்வப் புகாரை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தொடரும் அத்துமீறல்கள் அரபிக்கடலில் பாகிஸ்தான் கடற்படை இதுபோன்று ஆபத்தான முறையில் நடந்துகொள்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக, கடந்த 2011-ஆம் ஆண்டில் ஏடன் வளைகுடா பகுதியில் சர்வதேசக் கடலில் சென்றுகொண்டிருந்த இந்தியாவின் 'ஐஎன்எஸ் கோதாவரி' கப்பல் மீது பாகிஸ்தானின் 'பிஎன்எஸ் பாபர்' கப்பல் இதேபோல உரசிச் சென்றது குறிப்பிடத்தக்கது. தற்போதைய இந்த சம்பவம், ஏற்கனவே பதற்றமாக இருக்கும் இரு நாட்டு கடல் எல்லைப் பாதுகாப்பு சூழலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரபிக்கடலில் இந்திய போர் கப்பல் மீது மோதிய பாகிஸ்தான் போர் கப்பல்#indiavspakistan — Thanthi TV (@ThanthiTV) September 16, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/pakistani-warship-collides-with-indian-warship-shocking-incident-in-the-arabian-sea




