சென்னை, எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆபத்தான நகர்வு தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட அரசுப் பல்கலைக்கழகங்களில் நீண்ட நாட்களாகத் துணைவேந்தர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் நியமனத்தில் கவர்னர் ஏற்படுத்திய முட்டுக்கட்டை காரணமாக, தமிழக அரசே துணைவேந்தர்களை நியமிக்கும் வகையில் பலகட்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு முந்தைய திமுக அரசால் கொண்டுவரப்பட்ட சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை காரணமாகவே புதிய துணைவேந்தர்களை நியமிப்பதில் காலதாமதம் நிலவி வருகிறது. இதனால் கல்வி நிர்வாகம் முடங்கிக் கிடக்கும் சூழலில், துணைவேந்தர்களைத் தேர்வு செய்வதற்கான 'தேடுதல் குழுவின்' கட்டமைப்பில் தவெக அரசு மேற்கொள்ளத் துணியும் மாற்றங்கள் அதிர்ச்சியையும், பெருங்கவலையையும் அளிக்கின்றன. துணைவேந்தர் தேடுதல் குழுவில் தற்போதுள்ள 3 உறுப்பினர்களின் எண்ணிக்கையை 5 ஆக உயர்த்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ள அறிவிப்பு, கவர்னர் தரப்பின் அழுத்தங்களுக்கும், பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) பிரதிநிதியை இக்குழுவில் நுழைப்பதற்கான மத்திய அரசின் மறைமுக தந்திரங்களுக்கும் தமிழ்நாடு அரசு பணிந்து போகிறதோ என்ற பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக்கழகங்களின் தேடுதல் குழுவில், கவர்னரின் விருப்பப்படி யுஜிசி பிரதிநிதியை இணைப்பது என்பது, தமிழ்நாட்டின் உயர்கல்வித் தன்னாட்சி அதிகாரத்தை முற்றிலுமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லும் ஓர் ஆபத்தான நகர்வாகும். சற்றும் ஏற்புடையதல்ல "துணைவேந்தர்களை நியமிக்கும் முழு அதிகாரம் மாநில அரசுக்கே வழங்கப்பட வேண்டும்" என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாவை முந்தைய திமுக அரசு கொண்டு வந்தபோது, அப்போதைய கவர்னர் ஆர்.என்.ரவி அதற்கு முட்டுக்கட்டை போட்டார். அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று மாநில அரசு தனது உரிமைகளை நிலைநாட்டியது. தற்போது இது தொடர்பான மற்றொரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதோடு, மாநில அரசுக்குச் சாதகமாகவே தீர்ப்பு அமையும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இத்தகைய சூழலில், திடீரென இந்நிலைப்பாட்டில் மாற்றம் செய்வது சற்றும் ஏற்புடையதல்ல. எனவே, துணைவேந்தர்கள் தேடுதல் குழுவின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 5 ஆக உயர்த்தும் திட்டத்தையும், அதில் யுஜிசி பிரதிநிதியைச் சேர்க்கும் ஆபத்தான முடிவையும் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கை, திறமையான வழக்கறிஞர்களைக் கொண்டு வலுவாக நடத்தி, பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை நியமிப்பதில் தமிழ்நாட்டின் பிரத்தியேக உரிமைகளை அரசு நிலைநாட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும், கல்வி என்பது மாநிலப் பட்டியலில் நீடிக்க வேண்டிய மிக முக்கிய உரிமையாகும். அதில் மத்திய அரசின் மறைமுக அரசியலுக்கு இடம் தராமல், தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் காக்கவும், மாநில சுயாட்சியைக் காக்கவும் தமிழக அரசு உறுதியான, சமரசமற்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/state-autonomy-should-be-protected-in-the-appointment-of-vice-chancellors-stpi-party-insists




