விநாயகர் தலங்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு பெற்றவை. ஆலயம் எதுவாக இருந்தாலும் அங்கே கணபதி குடியிருப்பார் என்பதை நாம் அறிவோம். ஆனால் சில தலங்களில் அந்த கணபதிக்குத் தனிச்சிறப்பு இருக்கும். அவரைத் தவறாமல் வழிபடவேண்டும். அப்படி வழிபடும்போது அவர் மகிமையைச் சொல்லும் தலபுராணத்தை நினைத்துக் கொள்ள வேண்டும். அப்படி நினைத்து வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் அபரிமிதமானவை. அப்படி நம் கலக்கங்கள் எல்லாம் நீக்கி நல்லருள் தரும் ஒரு விநாயகர் சந்நிதி குறித்துத் தெரிந்துகொள்வோம். கும்பகோணம் - நீடாமங்கலம் சாலையில் உள்ளது ஆலங்குடி. கும்பகோணம், மன்னார்குடி, தஞ்சாவூர் எனப் பல ஊர்களில் இருந்தும் வசதியாகச் செல்ல முடியும். கும்பகோணத்துக்குத் தெற்கில் சுமார் 17 கி.மீ. தொலைவு; நீடாமங்கலத்துக்கு வடக்கே சுமார் 7 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது ஆலங்குடி. பொதுவாக இந்த ஊரில் அமைந்திருக்கும் ஆபத்சகாய ஈஸ்வரர் ஆலயம் குருஸ்தலமாகப் போற்றப்படுகிறது. ஜாதகத்தில் குரு சாதகமில்லாமல் இருப்பவர்கள் இங்கே வந்து வழிபட்டால் தீராத வினைகளும் தீரும் என்பது நம்பிக்கை. ஆலங்குடி தரிசனம் அப்படிப்பட்ட தலத்தில் அருளும் விநாயகருக்கு கலங்காமல் காத்த விநாயகர் என்பது திருநாமம். சில ஆலயங்களில் கோபுரத்தின் உட்புறம் கோபுரக் கணபதி இருப்பார். ஆலங்குடி ஆபத்சகாயர் ஆலயத்தில் இவர், ‘கலங்காமல் காத்த விநாயகர்’ என்ற பெயரில் உள்ளார். கோபுர கணபதி தரிசனம் தடைகளை அகற்றும் என்பது ஐதிகம். வாருங்கள் அந்தக் கணபதியின் திருக்கதையை அறிந்துகொள்வோம். மாகத முனிவருக்கும் விபூதி எனும் அசுரப் பெண்ணுக்கும் மகனாகப் பிறந்தவன் கஜாசுரன். அசுரகுரு சுக்கிராச்சார்யரின் உபதேசத்தின்படி, தவம் செய்து சிவபெருமானின் பேரருளையும், எவராலும் எந்த ஆயுதத்தாலும் அழியாத வரமும் பெற்றவன். வரம்பெற்ற மமதையில் தேவர்களையும் மக்களையும் வதைத்தான் அசுரன். தேவலோக ஐஸ்வரியங்களைக் கொள்ளையடித்தான். அனைவரையும் அடக்கி தனக்கு அடிமைகளாக்கினான். அவன் பெயரைச் சொன்னாலே, கதிகலங்கினார்கள் அனைவரும். அவனைக் பார்த்த மாத்திரத்தில் தோப்புக்கரணம் போட்டும், சிரசில் குட்டிக் கொண்டும், தேங்காய் உடைத்தும் மிகுந்த வணக்கத்துடன் நடந்து கொண்டனர். அப்போதுதான் அவனது கொடுமைக்கு ஆளாகாமல் தப்பிக்கலாம்! ஒருமுறை விளையாட்டுப் போக்கில் விண்ணில் சென்றவன், அங்குள்ள அண்டச் சுவர் ஒன்றை இடித்துவிட்டான். அதனால் ஆகாய கங்கை உடைப்பெடுத்தது. பூலோகம் முழுவதும் நீரில் மூழ்கியது. ஆனால், இரும்பூளை தலம் மட்டும் மூழ்கியும் மூழ்காமலும் இருந்தது. மகாபிரளயம் போன்றும் எங்கெங்கிலும் நீரினால் ஏற்பட்ட நாசத்தால், தாவரம் முதலான அனைத்தும் அழியும் நிலை கண்டு வருந்திய தேவர்கள், இந்தத் தலத்தில் அருளும் விநாயகரை வேண்டி அவரது பொற்பாதங்களைப் பணிந்து நின்றனர். விழுப்புரம் மாவட்டம் தீவனூர் லிங்க வடிவ விநாயகர் - காரியவெற்றியைக் காட்டி அருளும் நவகிரக சந்நிதி!ஆலங்குடி விநாயகர் அவர்களுக்கு அனுக்கிரஹம் செய்ய திருவுளம் கொண்டார் கணபதி. தனது தும்பிக்கையால் நீர் மொத்தத்தையும் உறிஞ்சினார். அண்டச் சுவரின் உடைப்பை தனது கால் பெரு விரலால் அடைத்தார்; ஆகாய கங்கையின் நீர் பெருகாமல் தடுத்தார். அத்துடன் விட்டாரா? இப்படி யரு மாபாதகம் விளைய வித்தானவன் கஜாசுரன் என்பதை அறிந்து, அவனை அழிக்கப் புறப்பட்டுவிட்டார்! பூதப்படை சூழ, கஜாசுரனின் ராஜதானியாகிய மதங்கபுரத்தை முற்றுகையிட்டார். போர் மூண்டது. அசுரன் விட்ட பாணங்களை எல்லாம், தன் கரத்திலிருந்த உலக்கையால் விலக்கி, அதனைக் கொண்டே அசுரனின் மார்பில் அடித்தார். அவன் மயங்கி வீழ்ந்தானேயன்றி, இறக்கவில்லை. அவன் இறவாத வரம் பெற்றவன் என்பதை அறிந்த விநாயகர், தம் கொம்புகளில் ஒன்றை ஒடித்து அவன் மீது ஏவினார். அவன் தன் உடலை விட்டு, பெருச்சாளியாக ஓடிவந்தான். அதை, தமது வாகனமாகக் கொண்டு அடக்கியாண்டார் ஆனைமுகன். இவ்வாறு கஜமுகனை அடக்கி, அனைவரையும் காத்து சுகம் பெற வைத்ததால், இந்தத் தலத்தின் பிள்ளையாருக்கு கலங்காமல் காத்த விநாயகர் என்று நாமகரணம்! அசுரன் அடங்கியபிறகு, அதுவரை அவனுக்கு செய்து வந்த. தோப்புகரணம், தலையில் குட்டிக் கொள்ளுதல், தேங்காய் உடைத்தல் ஆகியவற்றை பிள்ளையாருக்கே செய்து, வழிபட ஆரம்பித்தனர். ஆலங்குடி தரிசனம் இந்தக் கோபுர விநாயகரை ஒருமுறை நேரில் சென்று தரிசித்து வரவேண்டும். மேலும் ஆலயத்தில் இருக்கும் கணபதி சந்நிதியில் அவருக்கு முன்பாகத் தோப்புக்கரணம் இட்டு வழிபடுவது விசேஷம். அப்படி வழிபட்டு வந்தபின் தொடர்ந்து 11 வாரம் நம் வீட்டில் அவரை நினைத்து வழிபடவேண்டும். குறிப்பாக சதுர்த்தி திதியில் அவருக்கு கொழுக்கட்டை நிவேதனம் செய்து வழிபட சகல துன்பங்களும் விலகும். சத்ரு பயம் நீங்கும். வம்பு, வழக்குகள் அகன்று மனநிம்மதி கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள். வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஆலங்குடி சென்று ஆபத்சகாயரின் மைந்தனைத் தரிசித்து, கலக்கங்கள் யாவும் நீங்கி வாழ்வில் இன்புறுவோம். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஸ்ரீஉக்தவேதீஸ்வரர்: திருமண வரம் தரும் தலத்தில் சுயம்வரபார்வதி ஹோமம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/spiritual/temples/thiruvarur-alangudi-sri-kalangamal-katha-vinayagar




