சென்னை, கிரிப்டோ முதலீட்டு மோசடி வழக்குகள் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- கடந்த ஏழு மாதங்களாக மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் "FQL Investment Trading", "FQL Exchange App" "VG Investment Group Syndicate" ஆகிய பெயர்களில் பல்நிலை சந்தைப்படுத்தல் (MLM)-உடன் கூடிய கிரிப்டோகரன்சி வர்த்தக மோசடி நடைபெற்றுவந்தது தொடர்பாக புகார்கள் எழுந்தன. இத்திட்டத்துடன் தொடர்புடைய முகவர்கள், பொதுமக்களிடம் பணத்தை முதலீடு செய்யுமாறு கூறி, அசாதாரணமான தினசரி வெகுமதிகள் கிடைக்கும் என்றும், கிரிப்டோகரன்சி வர்த்தகம் மூலம் முதலீடு செய்த தொகை 40-45 நாட்களில் இரட்டிப்பாகும் என்றும் தவறான தகவல்களைத் தெரிவித்து. பொதுமக்களை முதலீடு செய்யத் தூண்டியதாகக் கூறப்படுகிறது. விசாரணை மேற்கண்ட நான்கு மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடமிருந்து மனுக்கள்/புகார்கள் பெறப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், மதுரை மாவட்ட காவல்துறையினர். சம்பந்தப்பட்ட முகவர்கள் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டு, கூறப்படும் கிரிப்டோகரன்சி வர்த்தக நடவடிக்கையின் தன்மை மற்றும் செயல்படும் விதம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். வங்கிக் கணக்குகள் முடக்கம் குறிப்பிட்ட புகார்கள் பெறப்பட்டு, ஆரம்பகட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கண்ட மோசடி தொடர்பாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 3 வழக்குகள் மதுரை மாவட்டத்திலும், திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் தலா 1 வழக்கும் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை 17 குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் தொடர்புடைய 13 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. முதற்கட்ட விசாரணையில், உள்ளூர் முகவர்கள் மூலம் பொதுமக்களிடம் ரொக்கம் மற்றும் G-Pay/UPI பரிவர்த்தனைகள் வழியாக கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் முதலீடு செய்யத் தூண்டப்பட்டுள்ளனர். பெறப்பட்ட தொகையின் ஒரு பகுதி Tether (USDT) உள்ளிட்ட கிரிப்டோகரன்சியாக மாற்றப்பட்டு, FQL/VG செயலிகள் மூலம் பராமரிக்கப்பட்டதாகக் கூறப்படும் வாலெட்டுகளில் வரவு வைக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. பின்னர் பணத்தைத் திரும்பப் பெறும் பரிவர்த்தனைகள் தோல்வியடைந்ததுடன். கணக்கில் காட்டப்பட்ட தொகைகள் எடுக்க முடியாமலும், கூடுதல் தொகை செலுத்துமாறு கோரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம் பின்னர் செயலி முடக்கப்பட்டதால், முதலீட்டாளர்கள் தங்களது கணக்குகளில் காட்டப்பட்டிருந்ததாகக் கூறப்படும் தொகைகளை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவரின் பங்கு, பரந்து விரிந்த மோசடி கும்பலின் தொடர்பு. பல மாவட்டங்களில் நடைபெற்றுள்ள மோசடிகள், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, அதிகமான நிதியிழப்பு. USDT. Binance வாலெட்டுகள் உள்ளிட்ட கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள் மற்றும் சந்தேகிக்கப்படும் சர்வதேச தொடர்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, முறையான, தீவிர விசாரணையின் தேவை மற்றும் பொதுநலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, காவல்துறை தலைமை இயக்குநர்/ படைத்தலைவர். முனைவர் மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் இன்று மேற்சொன்ன 6 வழக்குகளையும் பொருளாதார குற்றப்பிரிவுக்கு (Economic Offences Wing- EOW) மாற்றி உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/fql-investment-fraud-cases-transferred-to-economic-crimes-division




