ஆலந்தூர், சென்னையை அடுத்த பாலவாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் மின்சாரம் திடீரென துண்டிக்கப்பட்டது. நள்ளிரவு வரையிலும் மின்சாரம் வராததால் வீடுகளில் தூங்க முடியாமல் குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதிக்குள்ளானார்கள். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர், குழந்தைகளுடன் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சாலை மறியல் அப்போது பொதுமக்கள், தங்கள் பகுதியில் அடிக்கடி இதுபோன்று தொடர் மின்தடை ஏற்படுவதாக கூறியதுடன், பல்வேறு கேள்விகளையும் எழுப்பினர். ஆனால் அதற்கு மின்வாரிய அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் முறையான பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், நள்ளிரவில் பாலவாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்த நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள், சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/public-stage-road-blockade-at-midnight-to-protest-power-outage




