தூத்துக்குடி, நாட்டின் முன்னணி 5 நட்சத்திர ஆடம்பர ஓட்டல்களை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஏமாற்றி வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த முதியவரை, போலீசார் ஒடிசா மாநிலத்தில் கைது செய்தனர். 30 ஆண்டுகளாக முதியவரின் நூதன திருட்டு தூத்துக்குடியைச் சேர்ந்தவர் வின்சென்ட் ஜான் (வயது 69), 1980-களில் டெல்லியில் சுற்றுலா வழிகாட்டியாக பணியாற்றி வந்த ஓட்டல்களில் தங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஓட்டலில் நேரிட்ட அவமானத்திற்கு பழிவாங்கும் நோக்குடன், 1996 முதல் 30 ஆண்டுகளாக ஸ்டார் ஓட்டல்களை ஏமாற்றுவதை தொழிலாக மாற்றியுள்ளார். 300-க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் கைவரிசை கண்ணியமான தோற்றம், சரளமான ஆங்கில அறிவு ஆகியவற்றைப் பயன்படுத்தி தன்னை ஒரு யோகா ஆசிரியர், ஆங்கில ஆசிரியர் அல்லது சுற்றுலா வழிகாட்டியாக ஓட்டல் ஊழியர்களிடம் அறிமுகம் செய்து நம்பிக்கையைப் பெறுவதில் வல்லவராக இருந்துள்ளார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம், கோவா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், தெலுங்கானா, சத்தீஸ்கர் என்று பல மாநிலங்களில் உள்ள 300-க்கும் மேற்பட்ட சொகுசு ஓட்டல்களில் இவர் கைவரிசை காட்டியுள்ளார். ஓட்டல் அறைகளை முன்பதிவு செய்யும்போது இரண்டு பைகளுடன் வரும் இவர், ஒரு பையில் துணிகளையும், மற்றொரு பையில் பழைய செய்தித்தாள்கள் அல்லது தலையணைகளையும் நிரப்பி எடுத்து வருவார். வெளியில் செல்லும்போது ஊழியர்களுக்கு சந்தேகம் வராமல் இருக்க, செய்தித்தாள்கள் உள்ள பையை அறையிலேயே விட்டுவிட்டு, தனது துணிப்பையுடன் ஓட்டல் அறையில் இருக்கும் லேப்டாப், விலை உயர்ந்த வெளிநாட்டு மதுபானங்கள், சிகரெட்டுகள் போன்ற மதிப்புமிக்க பொருட்களைத் திருடிக் கொண்டு நைசாகத் தப்பி விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒடிசாவில் கைது இந்த நிலையில் கடந்த ஜூன் 25-ம் தேதியன்று சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள ஆடம்பர ஓட்டலில் 2 நாட்கள் தங்கிய வின்சென்ட் ஜான், ஊழியரை ஏமாற்றி ரூ.1.48 லட்சம் மதிப்புள்ள லேப்டாப்பைப் பெற்றுக்கொண்டதுடன், ரூ.63,755 பில் தொகையைச் செலுத்தாமல் ஜூன் 27-ம் தேதியன்று தப்பியுள்ளார். ஓட்டல் நிர்வாகத்தின் புகாரைத் தொடர்ந்து சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் ஒடிசா மாநிலத்தின் தலைநகர், புவனேஸ்வரில் வைத்து இவரைப் போலீசார் கைது செய்தனர். டெல்லி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இவர் மீது ஏமாற்று வழக்குகள் இருப்பதும், பலமுறை போலீசாரின் பிடியில் சிக்கினாலும் தொடர்ந்து இந்த மோசடிகளில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/30-years-300-star-hotels-involved-in-innovative-theft-elderly-man-arrested-in-odisha




