ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்க மோதிரங்களை திருடிக்கொண்டு ஓடிய பெண்ணை, நகை கடைக்காரரும் பொதுமக்களும் வீதியில் துரத்தி பிடித்த சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வாடிக்கையாளர் போல வந்த பெண் ஜெய்ப்பூர் நிவாரு சாலையில் 'பவானி ஜூவல்லர்ஸ்' என்ற புகழ்பெற்ற நகை கடை இயங்கி வருகிறது. இந்த கடைக்கு நேற்று வழக்கம்போல வியாபாரம் நடந்து கொண்டிருந்தபோது, நடுத்தர வயதுடைய பெண் ஒருவர் நகைகளை வாங்குவது போல வாடிக்கையாளராக உள்ளே நுழைந்தார். அவர் அங்கிருந்த ஊழியர்களிடம் தனக்கு தங்க மோதிரங்களை காட்டுமாறு கேட்டுள்ளார். ஊழியர்களும் அந்த பெண்ணின் பேச்சை நம்பி, விலை உயர்ந்த தங்க மோதிரங்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டியை எடுத்து அவர் முன்னால் வைத்தனர். 20 லட்ச ரூபாய் நகைகளுடன் ஓட்டம் ஊழியர்களின் கவனம் சற்று சிதறிய சமயம் பார்த்து, அந்த பெண் கண்ணிமைக்கும் நேரத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 25 தங்க மோதிரங்கள் அடங்கிய பெட்டியை அள்ளிக்கொண்டு கடையை விட்டு வெளியேறி மின்னல் வேகத்தில் ஓட்டம் பிடித்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர் திலோக் சந்த் பிரஜாபத் மற்றும் கடை ஊழியர்கள், "திருடி. திருடி." என சத்தம்போட்டபடி அந்த பெண்ணை வீதியில் துரத்தினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும் ஓடிவந்து அந்த பெண்ணை துரத்த தொடங்கினர். 500 மீட்டர் துரத்தி பிடிப்பு சுமார் 500 மீட்டர் தூரம் மூச்சிரைக்க துரத்தி சென்ற கடைக்காரர்களும் பொதுமக்களும், அந்த பெண்ணை வளைத்து பிடித்து, அவரிடமிருந்த நகை பெட்டியை பத்திரமாக மீட்டனர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த பெண் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் இருந்து மிளகாய் பொடி மற்றும் ஸ்பிரே பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் அதிர்ச்சி வாக்குமூலம் இதையடுத்து, அந்த பெண்ணை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் போலீசாரை வாயடைக்க வைத்தது.விசாரணையில் அவர், "எனக்கு குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இதனால் நான் நிம்மதியின்றி தவித்து வந்தேன். எப்படியாவது சிறைக்கு சென்றுவிட்டால் நிம்மதியாக இருக்கலாம் என நினைத்தேன். ஜெயிலுக்கு போவதற்காகவே இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டேன்" என்று எவ்வித பதற்றமும் இன்றி கூறினார். வழக்குப்பதிவு தற்போது இந்த திருட்டு மற்றும் பொதுமக்கள் துரத்தும் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி, அப்பகுதியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/i-stole-just-to-go-to-jail-woman-steals-rs-20-lakh-gold-rings




