திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறிப் போலி ஆவணங்கள் மூலம் வெறும் 2 கோடிக்கு மோசடிப் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இது குறித்து பழனி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் ச.முருகானந்தம் அளித்த புகாரின் பேரில், பழனி அடிவாரம் போலீசார் புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், போலி டிரஸ்ட் பிரமுகர் முருகதாஸ் உள்ளிட்ட 4 பேர் மீது கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த நில மோசடியில் பல முக்கியப் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்பதால், வழக்கினை சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரி அரசுக்குப் பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட தமிழக காவல்துறை தலைமையகம், இந்த வழக்கினை உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, பழனி அடிவாரம் போலீசாரிடம் இருந்து வழக்கு ஆவணங்கள் அனைத்தும் இணையதளம் மூலம் சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. கார்பார்க்கிங்காக உள்ள கோயில் நிலம் சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் நேற்று திண்டுக்கல், தேனி, திருச்சி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 5 சிபிசிஐடி இன்ஸ்பெக்டர்களின் மேல்பார்வையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் திண்டுக்கல் அலுவலகத்தில் முதற்கட்ட தகவல் அறிக்கை தயார் செய்து, பழனியில் சம்பந்தப்பட்ட இடத்தில் கள ஆய்வு நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, இன்று திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்ட பழனி அறநிலையத்துறை வழக்கு தாக்கல் செய்த முருகானந்தம் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகளிடம், மதுரையில் இருந்து வருகை தந்த சிபிசிஐடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஜிதா நேரில் விசாரணை நடத்தி வருகிறார். இந்த விசாரணையின் மூலம் மோசடியில் தொடர்புடைய மேலும் பல முக்கியப் புள்ளிகள் குறித்த விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/palani-temple-land-fraud-case-cb-cid-begins-questioning-hrce-officials




