அபுஜா, நைஜீரியாவைச் சேர்ந்த பிரபல சமகால நடனக் கலைஞர் ஒருவர், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிப்பதற்காகத் தொடர்ந்து 168 மணி நேரம் (7 நாட்கள்) இடைவிடாமல் நடனமாடும் மாபெரும் சவாலை மேற்கொண்டு உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளார். கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்க முயற்சி நைஜீரியாவின் கொம்பே மாநிலத்தைச் சேர்ந்தவர் பெஞ்சமின் டேனியல் கேப்ரியல் (வயது 33). இவர் கலை உலகில் 'பென் டான்சர்' என்று அழைக்கப்படுகிறார். பெஞ்சமின், கடந்த 18 ஆண்டுகளாக நடனத் துறையில் தொழில்முறை கலைஞராகப் பணியாற்றி வருகிறார். இவர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிப்பதற்காகத் தொடர்ந்து 168 மணி நேரம் (7 நாட்கள்) இடைவிடாமல் நடனமாடும் மாபெரும் சவாலை மேற்கொண்டார். இதையடுத்து கடந்த 21-ந்தேதி அன்று நைஜீரியாவின் லாகோஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற ப்ரீடம் பூங்காவில் இந்த மாரத்தான் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. ஆப்பிரிக்க நடனக் கலையின் உன்னதத்தையும், அதன் பன்முகத்தன்மையையும் உலக மேடைக்குக் கொண்டு சேர்ப்பதே இந்த முயற்சியின் முதன்மை நோக்கம் என பெஞ்சமின் தெரிவித்துள்ளார். பன்முக கலாச்சார நடனம் தனது 7 நாள் நடனப் பயணத்தில் பென் டான்சர் வெறும் உடல் வலிமையை மட்டும் சோதிக்காமல், நைஜீரியாவின் ஆழமான பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் நடனமாடினார். ஆப்பிரிக்காவின் புகழ்பெற்ற 'அப்ரோபீட்ஸ்', புஜி, ஜாஸ் மற்றும் ஜூக் போன்ற பல்வேறு இசை வடிவங்களுக்கு அவர் நடன அசைவுகளை வெளிப்படுத்தினார். மேலும், நைஜீரியாவின் 250-க்கும் மேற்பட்ட இனக்குழுக்களின் கலாச்சாரத்தை கவுரவிக்கும் விதமாக, நடனத்தின் இடையே பாரம்பரிய உடைகளான 'அக்பாடா' மற்றும் 'டாஷிகி' போன்ற ஆடைகளையும் அணிந்து ஆடினார். கின்னஸ் விதிமுறைகளும் கடின உழைப்பும் கின்னஸ் உலக சாதனை அமைப்பின் கடுமையான வழிகாட்டுதல்களின்படி இந்த சவால் நடைபெற்றது. தொடர்ந்து நடனமாடும் ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் தலா 5 நிமிடங்கள் மட்டுமே ஓய்வு அனுமதிக்கப்படும். பென் டான்சர் பல மணி நேரம் தொடர்ந்து நடனமாடி, அந்த ஓய்வு நிமிடங்களை ஒன்றாகச் சேர்த்து (உதாரணமாக 4 மணி நேரத்திற்கு ஒருமுறை 20 நிமிடங்கள்) ஓய்வெடுத்துக் கொண்டார். இந்த குறுகிய ஓய்வு நேரத்தில் அவர் திரவ உணவுகள் மற்றும் எளிதில் ஜீரணமாகக்கூடிய லேசான உணவுகளை மட்டுமே உட்கொண்டார். அவரது உடல்நிலையைக் கண்காணிக்க மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் நிகழ்விடத்திலேயே முகாமிட்டிருந்தனர். இந்த சவாலுக்கு முன்னதாக அவர் கார்டியோ மற்றும் உடற்தகுதி சார்ந்த தீவிரப் பயிற்சிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. சாதனையின் நிலை அதிகாரப்பூர்வமாக கின்னஸ் புத்தகத்தில் தனிநபர் ஒருவரால் நிகழ்த்தப்பட்ட மிக நீண்ட நடன மாரத்தான் சாதனை 127 மணி நேரம் ஆகும். இதனை 2023-ஆம் ஆண்டில் இந்தியாவின் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஸ்ருஷ்டி சுதிர் ஜாக்தாப் கதக் நடனத்தின் மூலம் நிகழ்த்தியிருந்தார். பெஞ்சமின் டேனியல் கேப்ரியல் சாதனையான 127 மணி நேரத்தைக் கடந்து, தனது இலக்கான 168 மணி நேர நடன சவாலை கடந்த 27-ந்தேதி வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். இறுதி முடிவு எப்போது? அவர் நிர்ணயித்த இலக்கை எட்டிவிட்ட போதிலும், கின்னஸ் உலக சாதனை அமைப்பு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இன்னும் சில வாரங்கள் ஆகலாம். பென் டான்சரின் குழுவினர் சமர்ப்பிக்கும் காணொளி ஆதாரங்கள், நேரக் கட்டுப்பாட்டுப் பதிவுகள் மற்றும் மருத்துவ சான்றுகளை கின்னஸ் நடுவர் குழு முழுமையாக ஆய்வு செய்த பின்னரே இந்த சாதனை முறையாகப் பதிவு செய்யப்படும். லாகோஸ் நகரின் இளைஞர்களும், பென் டான்சரின் ரசிகர்களும் திரண்டு வந்து கைதட்டி, அவரோடு சேர்ந்து நடனமாடி தங்களது பேராதரவை வழங்கியதால் ப்ரீடம் பூங்கா திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/world/7-days-of-non-stop-dancing-nigerian-artists-herculean-effort-to-set-a-guinness-record




