உடுமலை, திருமூர்த்தி அணையில் வண்டல் மண் அள்ளும் பணி தொடங்கியது. கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருமூர்த்தி அணை உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திருமூர்த்தி அணை அமைந்துள்ளது. இந்த அணைக்கு வனப்பகுதியில் உற்பத்தியாகும் ஆறுகள், ஓடைகள் நீராதாரமாக உள்ளன. இதைத்தவிர இந்த அணைக்கு பி.ஏ.பி. தொகுப்பு அணைகளிலும் இருந்தும் தண்ணீர் வருகிறது. இந்த அணையின் மூலம் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பி.ஏ.பி. பாசனத் திட்டத்தின் கீழ் பாசன வசதி பெறுகின்றன. பழைய ஆயக்கட்டு பாசனத்தில் தளி மற்றும் வளையபாளையம் வாய்க்கால் மூலம் 3 ஆயிரத்து 44 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வண்டல் மண் எடுக்க அனுமதி இந்தநிலையில் கோடை காலத்தை பயன்படுத்தி அணையில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை எடுப்பதற்கு அனுமதி அளிக்கும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதைத்தொடர்ந்து திருமூர்த்தி அணையில் வண்டல் மண் அள்ளும் பணி கடந்த மாதம் 27- ந் தேதி தொடங்கியது. ஆனால், இதில் முறைகேடு நடைபெறுவது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வண்டல் மண் அள்ளும் பணி கடந்த 31-ந் தேதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் அதிகாரிகள் மூலம் ஆய்வும் செய்யப்பட்டது. இந்த நிலையில் வண்டல் மண் அள்ளுவதற்கு தொடர்ந்து அனுமதி அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த பிரச்சினை, சட்டசபையிலும் எதிரொலித்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள், வண்டல் மண் அள்ளும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கண்காணிக்க வேண்டும் இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், வண்டல் மண் அள்ளும் போது முறைகேடு நடந்தது. இது குறித்த புகாரின் பேரில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட வண்டல் மண் அள்ளும் பணி மீண்டும் நேற்று முதல் தொடங்கி நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட நபர் எவ்வளவு கன மீட்டர் மண் எடுத்துச் செல்கிறார்?, அவர் தனது சொந்த நிலத்துக்குத்தான் கொண்டு செல்கிறாரா? அல்லது வேறு உபயோகத்துக்கு பயன்படுத்துகிறாரா?, அணைப் பகுதியில் விவசாயிகள் அல்லாத நபர்கள் வணிக நோக்கத்துக்காக மண் அள்ளுகின்றனரா? என்று தினமும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். இதேபோல் வண்டல் மண்ணை தவிர சரளைமண், செம்மண் உள்ளிட்டவை எடுத்துச் செல்லப்படுகிறதா? என்பதையும் கண்காணிக்க வேண்டும். நடவடிக்கை கடுமையானால் தான் சரியான நபர்கள் பயன்பெற இயலும். அணையில் தேங்கியுள்ள வண்டல் மண் முறையாக விவசாய நிலத்துக்கு சென்றால் தான் விளைச்சலும் பெருகும், விவசாயியும் வளர்ச்சி அடைவார் என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/silt-removal-work-resumes-at-thirumurthy-dam




