சென்னை, தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- மாணவி தற்கொலை நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த மாணவி ஸ்ருதிலயா, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் கலந்தாய்வில் இடம் கிடைக்காத மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டுள்ள செய்தி நெஞ்சை உலுக்குகிறது. மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு கடினமாக உழைத்த ஒரு இளம் மகளை நாம் இழந்திருப்பது தாங்க முடியாத வேதனையளிக்கிறது. மாணவி ஸ்ருதிலயாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ்சும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் மாணவியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவர். தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 7.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவச் செல்வங்கள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள்; அதில் லட்சக்கணக்கான மாணவர்கள் மருத்துவக் கனவோடு நீட் தேர்வெழுதுகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள மொத்த மருத்துவ இடங்களோ வெறும் 13,999 மட்டுமே. தமிழ்நாட்டில் நீட் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 2025-இல் 76,181 ஆக இருந்து, 2026-இல் 61,306 ஆகக் குறைந்து 19.5% கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. சுமார் 15,000 தகுதியுடைய மாணவர்கள் குறைந்து போயிருப்பது, இந்த முறைகேடான தேர்வு முறையின் மீது மாணவர்களுக்குத் துளியும் நம்பிக்கையற்றுப் போய்விட்டதையே காட்டுகிறது. எந்த உயிரும் பறிபோகக் கூடாது நீட் தேர்வு என்ற கொடூரமான முறை தமிழ்நாட்டு மாணவர்களின் உயிர்களையும் கனவுகளையும் தொடர்ந்து பறிப்பது எப்போது முடிவுக்கு வரும்? நீட் கொடுமையால் இனி எந்தவொரு மாணவரின் உயிரும் பறிபோகக் கூடாது. தமிழ்நாடு தொடர்ந்து போராடியும் மாணவர்களின் மரணங்களைக் கண்டும் காணாமல் இருக்கும் மோடி அரசின் கல் நெஞ்சமும் பிடிவாதமுமே இந்த தொடர் துயரங்களுக்குக் காரணம். மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதை மோடி அரசும், மத்திய கல்வி மந்திரி பிரஹலாத் ஜோஷியும் உடனடியாக நிறுத்திவிட்டு, தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/neet-must-be-completely-scrapped-out-of-respect-for-the-sentiments-of-tamil-nadu-manickam-tagore




